தகவல் தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்யும் இந்தியர்கள்...! ஆனால் பயனடைவது அமெரிக்கா...!


தகவல் தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்யும் இந்தியர்கள்...! ஆனால் பயனடைவது அமெரிக்கா...!
x
தினத்தந்தி 30 Nov 2021 10:01 AM GMT (Updated: 30 Nov 2021 10:39 AM GMT)

இந்தியர்களின் திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

லகத்தை  டிஜிட்டல் தளங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியுள்ளது.காலை கண் விழிப்பது முதல் இரவு தூங்கச் செல்வது வரை நாம் பல டிஜிட்டல் தளங்களையே  கடக்க வேண்டி உள்ளது. கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் , இன்ஸ்டாகிராம்  போன்றவற்றை  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பொழுதுபோக்கு என்பதையெல்லாம் தாண்டி தற்போது டிஜிட்டல் பலரின் வேலையோடும், எண்ணங்களோடும்  ஒன்றிவிட்டது. 

அப்படிப்பட்ட டிஜிட்டல் தளங்களை நிர்வகிப்பதில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்கள் உலகளவில்  சாதனை படைத்து வருகின்றனர் .உலகம் முழுவதும் உள்ள பல தொழில்நுட்ப சக்திகளின் வளர்ச்சியில் சமீப காலமாக இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்

மைக்ரோசாப்ட் ,கூகுள், ஷாப்பிங்கிற்கு நாம் பயன்படுத்தும் மாஸ்டர் கார்டுகள் வரை, வாழ்க்கையை எளிதாக்கியுள்ள  கண்டுபிடிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களில் இந்தியர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர்.

அப்படியான ஒரு முக்கிய சோஷியல் மீடியாவான, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலாளராக  ஜேக் டார்சி நேற்று பதவி விலக, அதற்கான இடத்தில் அமர உள்ளார்  இந்தியரான பரக் அகர்வால். 

முக்கிய சோஷியல் மீடியாவான டுவிட்டரை இனி நிர்வகிக்கப் போவது ஒரு இந்தியர் என்பது , உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை,  உலகத்தையே தன் கைக்குள் வைத்திருக்கும் சில முக்கிய நிறுவனங்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 

தொழில்நுட்ப உலகில் இந்தியர்களின் வியத்தகு வெற்றி ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.அப்படிப்பட்ட உச்ச வெற்றிகளை அடைந்த இந்தியர்கள் சிலர் பற்றி தெரிந்து கொள்வோம்.

சுந்தர் பிச்சை

சென்னை அசோக் நகரில் இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ந்த சுந்தர் பிச்சை  ஆகஸ்ட், 2015 ஆம் ஆண்டு கூகுள் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.46 வயதான அவர், காரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் படித்தார்.பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் செமிகண்டக்டர்ஸ் இயற்பியலில் படிக்க உதவித்தொகை பெற்றார்.

அதன் பிறகு அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் தனது எம்பிஏ படிப்பை முடித்தார்.பின்னர்  மெக்கின்சி  நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். அவர் 2004 ஆம் ஆண்டில் கூகுளில் சேர்ந்தார் மற்றும் கூகுள் குரோம் ஓஎஸ் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்ட முக்கிய தயாரிப்புகளுக்கான தயாரிப்பு மேலாண்மை மற்றும் புதுமை முயற்சிகளுக்கு இவர் தலைமை தாங்கி உள்ளார்.

சத்யா  நாடெல்லா 

51 வயதாகும் நாடெல்லா, பிப்ரவரி 2014 இல் மைக்ரோசாப்ட் தலைவராக நியமிக்கப்பட்டார்.22 ஆண்டுகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு மைக்ரோசாப்டின் கிளவுட் மற்றும் எண்டர்பிரைஸ் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

ஹைதராபாத்தில் பிறந்த இவர்  மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். அதன் பிறகு விஸ்கான்சின், மில்வாக்கி பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும், சிகாகோ பல்கலைக்கழக பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏவும் செய்தார்.

இந்திரா நூயி 

இந்திய அமெரிக்க வணிக நிர்வாகியான இவர் தற்போது உலகின் இரண்டாவது பெரிய உணவு மற்றும் குளிர்பான வணிகமான பெப்சிகோவின் தலைவராக பணியாற்றுகிறார். நடுத்தர தமிழ் பேசும் இந்தியக் குடும்பத்தில் பிறந்த நூயி, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

சாந்தனு நாராயண்

இந்திய அமெரிக்க வணிக நிர்வாகியான இவர்  1998 ஆம் ஆண்டில் அடோப் நிறுவனத்தில் உலகளாவிய தயாரிப்பு ஆராய்ச்சியின் மூத்த துணைத் தலைவராக சேர்ந்தார்.பின்னர் நிர்வாக துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் .இறுதியாக நவம்பர் 2007 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்த இவரது  தாயார் அமெரிக்க இலக்கிய ஆசிரியராவர்.அவரது தந்தை ஐதராபாத்தில் பிளாஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நாராயண் இந்தியாவில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். மேலும் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், பவுலிங் கிரீன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் எம்எஸ் பட்டமும் பெற்றவர்.

அஜய்பால் சிங்

 இந்திய சீக்கிய அமெரிக்க வணிக நிர்வாகியான இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு முதல்  மாஸ்டர்க்கார்ட்  நிறுவனத்தின் தலைவராக பணியாற்றுகிறார். 

இந்திய இராணுவத்தின் இராணுவ ஜெனரலுக்குப் பிறந்த பங்கா, தனது குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் முழுவதையும் நாட்டில் பல பள்ளிகளில் படித்துள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பிஏ பட்டம் பெற்றார் மற்றும் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

ராஜீவ் சூரி 

சிங்கப்பூர் இந்திய வணிக நிர்வாகியான இவர்  எந்தவொரு பிஜி/எம்பிஏ பட்டமும் இல்லாமல் வணிகத்தில் உயரங்களை எட்டிய உயர் நிறுவன நிர்வாகிகளில் இவரும் ஒருவர்.1995 ஆம் ஆண்டு  நோக்கியாவில் சேர்ந்த இவர்  மற்றும் நிறுவனத்தின் தலைமை செயலாளராக ஆக  ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அவர் தற்போது பின்லாந்தின் எஸ்பூவில் வசிக்கிறார். மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார்.20 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச அனுபவத்தைக் கொண்டவர் மற்றும் உத்தி, தயாரிப்பு சந்தைப்படுத்தல், விற்பனை போன்ற பல்வேறு நிலைகளிலும் பணியாற்றி உள்ளார்.

ஆனால் இவ்வளவு இந்தியர்கள்  உலக அளவில் தகவல் தொழி நுட்ப நிறுவனங்களில் பணியாற்றினாலும்  பயன்டைவது என்னவோ அமெரிக்காதான். 

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலாளராக பரக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் " இந்தியர்களின்  திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது " என குறிப்பிட்டுள்ளார்.


Next Story