ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயல்படாது - மாடர்னா தடுப்பூசி நிறுவனம்!


ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயல்படாது - மாடர்னா தடுப்பூசி நிறுவனம்!
x
தினத்தந்தி 30 Nov 2021 1:58 PM GMT (Updated: 30 Nov 2021 1:58 PM GMT)

ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகளை கண்டறிந்து தயாரிப்பதற்கு அதிக மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது.

சிட்னி,

கொரோனா தடுப்பூசிகள் டெல்டா வகை வைரசுக்கு எதிராக செயல்பட்ட திறனுடன் புதிய வகை ஒமிக்ரான் வைரசுடன் திறம்பட எதிர்த்து போராட முடியாது என்று மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, கொரோனா பெருந்தொற்று நீண்ட காலம் தொடரும் எனவும் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகளை கண்டறிந்து தயாரிப்பதற்கு அதிக மாதங்கள் ஆகலாம், தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளில் அடுத்த ஆண்டிலிருந்து சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்.

புதிய வகை கொரோனா ஒமிக்ரான் காரணமாக உலகின் பல நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக, கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பயோடெக் நிறுவனம் பைசர் நிறுவனத்துடன் இணைந்து ஒமிக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆனால் இதற்கு முரண்பாடாக,  ஒமிக்ரான் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறனை ஸ்புட்னிக் தடுப்பூசி கொண்டுள்ளது என ரஷிய நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 20, 2022க்குள் பல ஸ்புட்னிக் ஓமிக்ரான் பூஸ்டர்களை வழங்குவோம் எனவும் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

புதிய வகை கொரோனா ஒமிக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற வேளையில், அது பேரழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story