புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் தொடர்பாக புதிய விதிமுறைகள் வெளியீடு - டுவிட்டர் அதிரடி


புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் தொடர்பாக புதிய விதிமுறைகள் வெளியீடு - டுவிட்டர் அதிரடி
x
தினத்தந்தி 1 Dec 2021 2:44 PM GMT (Updated: 1 Dec 2021 2:44 PM GMT)

டுவிட்டரில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா,

முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் சேவையை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தில் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. டுவிட்டர் நிறுவனம் பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

ஏற்கெனவே பயனாளரின் தொலைபேசி எண், முகவரி தனிப்பட்ட தகவல்களை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டுவிட்டரின் புதிய சிஇஓவாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்ட அடுத்த நாளே புதிய விதிமுறையை டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, டுவிட்டரில் தனி நபர்களின் புகைப்படம், வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பகிர தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுநபர்களாக இல்லாதவர்கள் தங்கள் அனுமதியின்றி புகைப்படம் பகிரப்பட்டிருப்பதாக புகார் அளித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனடியாக அகற்றப்படும் என்றும் ஊடகங்கள் மற்றும் பொது நலனுக்காக பகிரப்படும் புகைப்படங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களை அச்சுறுத்தும் விதமாக பெண்கள் மற்றும் சமூகத்திற்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் தவறான வதந்திகளை தடுக்க இந்த புதிய விதிமுறை உதவும் என நம்பப்படுகிறது.


Next Story