‘ஒமைக்ரான்’ வைரஸ்! தென்கொரியாவையும் விட்டு வைக்கவில்லை...


‘ஒமைக்ரான்’ வைரஸ்! தென்கொரியாவையும் விட்டு வைக்கவில்லை...
x
தினத்தந்தி 1 Dec 2021 4:28 PM GMT (Updated: 1 Dec 2021 4:33 PM GMT)

தென்கொரியாவில் 5 நபர்களுக்கு ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோல்,

‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. 

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் வேகமாக பரவுகிறது. அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ‘ஒமைக்ரான்’ கால்பதித்து விட்டது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தெற்கு ஆப்பரிக்க நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஒருபடி மேலே சென்று ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை விதித்துள்ளன.

இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் காரணமாக தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது. 

தென்கொரியாவில் 5 நபர்களுக்கு ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அங்கு இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்றைய கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தென்கொரியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனாவால் ஒரு நாளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 30 க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. 720 கொரோனா நோயாளிகள் அபாய கட்டத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அங்கு கடந்த மாதம் கொரோனா கால கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகளும் திறக்கப்பட்டன. எனினும், தீவிர தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் இறப்பு எண்ணிக்கையயும் மருத்துவமனையில் சேருவோர் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story