தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த நாட்டில் இரவில் வெளியே நடமாட தடை..?!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Dec 2021 5:47 AM GMT (Updated: 2 Dec 2021 5:47 AM GMT)

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி உள்ளது.

பெய்ரூட், 

உருமாறிய புதிய கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி கண்டறியப்பட்டிருப்பது உலகை உலுக்கி உள்ளது. இதற்கு காரணம், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 பிறழ்வுகளை கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுவதுதான். 

இதனால் பல நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் பற்றி முழுமையாக தெரியவர சில வாரங்கள் பிடிக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

இந்நிலையில் லெபனான் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பிராஸ் அபியாட் பிறப்பித்துள்ளார். 

இதன்படி டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை, இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்கள் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக லெபனானில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி லெபனானில் 6,72,548 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 8,735 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

Next Story