அமெரிக்காவிலும் பரவிய ஒமைக்ரான் - 8 பேருக்கு தொற்று உறுதி


அமெரிக்காவிலும் பரவிய ஒமைக்ரான் - 8 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 3 Dec 2021 2:07 AM GMT (Updated: 3 Dec 2021 2:07 AM GMT)

நியூயார்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது.

இதற்கிடையில், தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. ‘ஒமைக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பிற வைரஸ்களை ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவிலும் பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில், நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண மேயர் தெரிவித்துள்ளார். அதேவேளை கலிபோர்னியா, கொலராடோ, மினிசோடா ஆகிய 3 மாகாணங்களிலும் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் அறிகுறிகள் சிறிய அளவில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story