அமெரிக்காவில் ஐ.நா. தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு


அமெரிக்காவில் ஐ.நா. தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 10:44 PM GMT (Updated: 3 Dec 2021 10:44 PM GMT)

அமெரிக்காவில் ஐ.நா. தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுசபையின் தலைமையகம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஐ.நா. தலைமையகத்துக்கு வந்தார். அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார்.

ஐ.நா. தலைமையகத்தின் நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அந்த நபர் துப்பாக்கியை போலீசாரை நோக்கி நீட்டவோ அல்லது அவர்களை அச்சுறுத்தவோ இல்லை. மாறாக அவர் தனது தலையில் துப்பாக்கியை வைத்து, தான் கொண்டு வந்துள்ள சில ஆவணங்களை ஐ.நா. அதிகாரிகளிடம் வழங்க அனுமதிக்க வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார்.

இதை தொடர்ந்து, போலீசார் அவருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் அவர் கொண்டு வந்துள்ள ஆவணங்களை பெற்று, அதிகாரிகளிடம் வழங்க போலீசார் ஒப்புக்கொண்டனர்.

அதன் பின்னர் அவர் போலீசில் சரணடைந்தார். ஆவணங்களையும் போலீசாரிடம் வழங்கினார். அவர் வழங்கிய ஆவணங்கள் தனிப்பட்ட நபரின் மருத்து அறிக்கைகள் என்றும், ஐ.நா.வுடன் தொடர்புடையது எதுவும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story