அமெரிக்காவில் நிதி பற்றாகுறையில் தவிக்கும் பாகிஸ்தான் தூதரகம்


அமெரிக்காவில் நிதி பற்றாகுறையில் தவிக்கும் பாகிஸ்தான் தூதரகம்
x
தினத்தந்தி 5 Dec 2021 12:52 AM GMT (Updated: 5 Dec 2021 12:52 AM GMT)

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் கடுமையான நிதி பற்றாகுறையில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டன்,

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடன் சுமை ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் கடுமையான நிதி பற்றாகுறையில் சிக்கியிருப்பதாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தூதரகத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்று வரும் அமெரிக்கர்கள் 5 பேருக்கு ஆகஸ்டு மாதம் முதல் ஊதியம் வழங்கவில்லை என்றும் இதனால் 5 ஊழியர்களில் ஒருவர் பணியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தூதரக அதிகாரிகள் கூறுகையில் “கொரோனா தொற்றுக்கு பிறகு, வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு நிதி திருப்பி விடப்பட்டதால், தூதரகம் நிதியைப் பராமரிக்க போராடியது. இது இறுதியில் சம்பள வழங்கலை பாதித்தது மற்றும் உள்நாட்டில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கான மாதாந்திர சம்பளத்தை வைத்துக்கொள்ள தூதரகம் பணத்தை கடன் வாங்க வேண்டியிருந்தது” என கூறினார்.

அதே வேளையில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகளிடம் இந்த பிரச்சினை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி, கடந்த வாரம் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள பாக்கியை செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story