இங்கிலாந்தில் சதமடித்த ஒமைக்ரான் பாதிப்பு!


Image courtesy:business-standard.com
x
Image courtesy:business-standard.com
தினத்தந்தி 8 Dec 2021 3:08 AM GMT (Updated: 8 Dec 2021 3:08 AM GMT)

இங்கிலாந்தில் ஒரே நாளில் 101 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 25ம் தேதி  கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு 38க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.  இதனால், தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல நாட்டு அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த சூழலில் இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

அங்கு நேற்று ஒரே நாளில் 101 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி, அங்கு இதுவரை மொத்தம் 437 பேர் ஒமைக்ரான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

பிரிட்டனில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 81 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 36 சதவீதத்திற்கும் அதிகமானோர் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,691 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்தது இதன்மூலம் நேற்றைய நிலவரப்படி, அங்கு கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,60,341 ஆக உயர்ந்துள்ளது. 

ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் தெரிவித்திருந்தார். பொதுமக்கள் அதிக கவனத்துடன் பாதுகாப்பாக இருக்கும்படி மருத்துவ வல்லுனர்களும் விஞ்ஞானிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானி அந்தோனி பாசி “அதிகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தாது. நோயாளிகள் மருத்துவமனையில் அதிகமாக  அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இறப்புகள் அதிகமாக இருக்காது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story