இங்கிலாந்தில் இளவரசரின் அரண்மனைக்கு அருகே துப்பாக்கிச்சூடு; ஒருவர் சாவு


இங்கிலாந்தில் இளவரசரின் அரண்மனைக்கு அருகே துப்பாக்கிச்சூடு; ஒருவர் சாவு
x
தினத்தந்தி 12 Dec 2021 10:27 PM GMT (Updated: 12 Dec 2021 10:27 PM GMT)

இங்கிலாந்தில் இளவரசரின் அரண்மனைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லண்டன், 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள கென்சிங்டன் நகரில் அந்த நாட்டின் அரச குடும்பத்துக்கு சொந்தமான அரண்மனை உள்ளது. இங்கு இளவரசர் வில்லியம் தனது மனைவி கதே மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் இந்த அரண்மனைக்கு அருகில் பல நாடுகளின் தூதரகங்களும் அமைந்துள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதிலும் எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கென்சிங்டன் நகருக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஒரு வங்கிக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்தார். பின்னர் அவர் காரில் ஏறி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

இதற்கிடையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அரச குடும்பத்தின் அரண்மனைக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வங்கி கொள்ளையன் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்தினர்.

அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். இதை தொடர்ந்து போலீசார் அவரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இளவரசரின் அரண்மனைக்கு அருகில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story