வங்காளதேசம்: பயணிகள் படகில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு


வங்காளதேசம்: பயணிகள் படகில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 Dec 2021 3:52 AM GMT (Updated: 25 Dec 2021 3:52 AM GMT)

வங்காளதேசத்தில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு 400 பேருடன் 3 அடுக்குகளை கொண்ட பயணிகள் படகு பர்குனா மாவட்டம் நோக்கி புறப்பட்டது. 

ஜலாஹதி மாவட்டத்தில் உள்ள சுகந்தா ஆற்றில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது படகில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் அறையில் ஏற்பட்ட தீ மளமளவென படகின் பிற பகுதிகளுக்கும் வேகமாம பரவியது.

அதிகாலை பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்ததால் இந்த தீ விபத்தில் பலர் சிக்கிக்கொண்டனர். தீயில் இருந்து தங்கள் உயிரை காப்பற்றிக்கொள்ள பல பயணிகள் ஆற்றில் குதித்தனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படகில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. 

ஆனாலும், இந்த தீ விபத்தில் படகில் பயணித்த பலர் சிக்கினர். தீயில் சிக்கி உடல் கருகி பல பயணிகள் உயிரிழந்தனர். மேலும், தீயால் ஏற்பட்ட புகையாலும் மூச்சுத்திணறி பலர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், படகில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

Next Story