பிரான்சில் கொரோனா கோரத்தாண்டவம்: ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு


பிரான்சில் கொரோனா கோரத்தாண்டவம்:  ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2022 12:22 AM GMT (Updated: 2022-01-07T05:52:13+05:30)

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடுகிறது. ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாரீஸ், 

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடுகிறது. ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் கோரத்தாண்டவமாடுகிறது. நேற்று முன்தினம் காலையுடன் முடிந்த ஒரு நாளில் அங்கு 3 லட்சத்து 32 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 334 பேர் இறந்தும் உள்ளனர்.

இதுதொடர்பாக பாரீஸ் நகரில் அரசு செய்தி தொடர்பாளர் கேபிரியேல் அட்டல் பேசினார். அப்போது அவர், “பிரான்சில் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் முடியவில்லை. 2 வாரங்களில் பரவல் 3 மடங்கு ஆகி உள்ளது. 1 லட்சம் பேருக்கு 1,800 பேர் பாதிப்புக்கு ஆளாகின்றனர்” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்தான். இந்த நிலை அடுத்த சில வாரங்களில் மேலும் மோசமாகும். தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு சேருகின்றனர்” என குறிப்பிட்டார்.

இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் காலையுடன் முடிந்த ஒரு நாளில் சுமார் 2 லட்சம் பேர் (சரியாக 1 லட்சத்து 94 ஆயிரத்து 747 பேர்) பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 38 லட்சத்து 35 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள்ளது.

டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 15-ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் 7 லட்சத்து 4 ஆயிரத்து 369 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். 2,113 பேர் இறந்துள்ளனர். தினசரி சராசரி பாதிப்பு 5.84 லட்சமாக உள்ளது.

நேற்றைய நிலவரப்படி அங்கு இதுவரை 5.77 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.32 லட்சம் பேர் பலியாகியும் உள்ளனர்.

Next Story