பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரசால் அச்சுறுத்தலா..? உலக சுகாதார அமைப்பு தகவல்


பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரசால் அச்சுறுத்தலா..? உலக சுகாதார அமைப்பு தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2022 1:02 AM GMT (Updated: 8 Jan 2022 1:02 AM GMT)

பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரசால் அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ஜெனீவா, 

பிரான்ஸ் நாட்டில் புதிதாக பி.1.640 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

ஐ.எம்.யு. மாறுபாடு என்றும் அறியப்படுகிற இந்த வைரஸ், முதலில் பிரான்சின் மார்சேயில் உள்ள ஐ.எச்.யு. மெடிட்டரேனி தொற்று நிறுவனத்தின் கல்வியாளர்களால் கண்டறியப்பட்டது.

இதையொட்டி ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர திட்டத்தின் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் மரிய வான் கெர்கோவ் மற்றும் தடுப்பூசி மற்றும் உயிரியல் துறையின் இயக்குனர் கேதரின் ஓ பிரையன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பி.1.640 மாறுபாடு முதலில் 2021 செப்டம்பரில் பல நாடுகளில் காணப்பட்டது. உள் ஆலோசனைகளை தொடர்ந்து இந்த வைரஸ், கண்காணிப்பின் கீழான வைரஸ் (வியுஎம்) என உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நிறைய உருமாற்றங்களை கொண்டுள்ளது. அதனால்தான் மக்களின் விழிப்புணர்வுக்காக கண்காணிப்பின் கீழான வைரஸ் (வியுஎம்) என வகைப்படுத்தப்பட்டது.

பி.1.640 வைரஸ் பரவலில் அதிகமாக உள்ள வைரஸ் அல்ல. இது சுழற்சியில் உள்ள விகாரத்தின் ஒரு சிறிய பகுதிதான். பிரான்சில் மரபணு வரிசைப்படுத்தல் சோதனையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே இன்னும் அச்சுறுத்தல் எழவில்லை” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story