ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை:மியான்மர் நீதிமன்றம் உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Jan 2022 8:10 AM GMT (Updated: 10 Jan 2022 8:10 AM GMT)

ஆங் சான் சூகி வீட்டை ராணுவ வீரர்கள் சோதனையிட்டபோது, ​​கடத்தல் கருவிகளைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாங்கூன்,

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.

அப்போது முதல், வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய மியான்மர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.  அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.   

இந்நிலையில் மியான்மரில் உள்ள ஜூண்டா நீதிமன்றத்தில் நடைபெற்ற மூன்று கிரிமினல்  வழக்குகளிலும்  ஆங் சான் சூகியை குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

76 வயதான சூகி, வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, சொந்தமாக வைத்திருப்பது மற்றும் கொரோனா வைரஸ் விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது வீட்டை ராணுவத்தினர் சோதனையிட்டபோது, ​​கடத்தல் கருவிகளைக் கண்டுபிடித்ததாக கூறி ஜூண்டா நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

கடந்த டிசம்பரில் நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கான தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்து, தலைநகர் நய்பிடாவில் வீட்டுக் காவலில் ஆங் சான் சூகி தனது தண்டனை காலத்தை அனுபவிக்க முடியும் என்று மியான்மர் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்துள்ளார். 

ஆங் சான் சூகிக்கு மேலும் தண்டனைகள் வழங்குவது நாடு தழுவிய அதிருப்தியை அதிகரிக்கும் என்று  மியான்மர் மனித உரிமை கண்காணிப்பு ஆய்வாளர் மேனி மாங் கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story