ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ: 1,200 குடிசைகள் எரிந்து சாம்பல்


ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ: 1,200 குடிசைகள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 10 Jan 2022 10:29 PM GMT (Updated: 10 Jan 2022 10:29 PM GMT)

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 1,200 குடிசைகள் எரிந்து சாம்பலானது.

டாக்கா, 

வங்காளதேசத்தின் தென்கிழக்கில் காக்ஸ் பஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் 1,200 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. எனினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

மாலை 4:40 மணிக்கு தீ பற்றத் தொடங்கியது என்றும் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் என்றும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். ரோஹிங்கியா அகதிகள் முகாமின் சில பகுதிகள் தீயில் எரிந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.

முன்னதாக முஸ்லிம் சிறுபான்மையினரில் பலர் மியான்மரில் 2017 ஆம் ஆண்டு இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து தப்பினர், அவர்கள் பங்களாதேஷின் எல்லை மாவட்டமான காக்ஸ் பஜாரில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

Next Story