தண்டவாளத்தில் விழுந்த விமானம்: விமானியை நொடிப்பொழுதில் மீட்ட பொதுமக்கள்...!!


தண்டவாளத்தில் விழுந்த விமானம்: விமானியை நொடிப்பொழுதில் மீட்ட பொதுமக்கள்...!!
x
தினத்தந்தி 11 Jan 2022 12:05 AM GMT (Updated: 2022-01-11T05:35:58+05:30)

அமெரிக்காவில் தண்டவாளத்தில் விழுந்த விமானத்தில் இருந்து விமானியை நொடிப்பொழுதில் பொதுமக்கள் மீட்ட சினிமாவை மிஞ்சும் சம்பவம் நடந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ், 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெயிட்மேன் விமான நிலையத்தில் ஒற்றை என்ஜின் கொண்ட சிறய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி ஒருவர் மட்டும் இருந்தார்.

கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் சாலையின் நடுவே இருந்த ரெயில் தண்டவாளத்தில் விழுந்தது. எனினும் இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் விபத்தில் விமானத்தின் முன்பகுதி சிதைந்துபோனதால் விமானி அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். மேலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டதால் அவரால் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேற முடியவில்லை.

இதற்கிடையில் விமானம் விழுந்த ரெயில் தண்டவாளத்தில் அதிவேக ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனால் விமான விபத்தில் உயிர் தப்பிய விமானி ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது.

இதை பார்த்து பதறிப்போன அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விரைந்து செயல்பட்டு விமான இடிபாடுகளுக்குள் சிக்கிய விமானியை நொடிப்பொழுதில் வெளியே இழுந்து காப்பற்றினார். விமானியை வெளியே இழுந்த அடுத்த சில நொடிகளில் அதிவேக ரெயில் தண்டவாளத்தில் கிடந்த விமானத்தின் மீது மோதிவிட்டு சென்றது.

சினிமா பாணியில் அரங்கேறிய இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story