வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - ஒரே வாரத்தில் இரண்டாவது சோதனை...!


வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - ஒரே வாரத்தில் இரண்டாவது சோதனை...!
x
தினத்தந்தி 11 Jan 2022 1:51 AM GMT (Updated: 11 Jan 2022 1:51 AM GMT)

வடகொரியா கடந்த 5-ம் தேதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

பியோங்யங்,

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல’ என்று கூறினார். இதனால், இந்த ஆண்டு முதல் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என நம்பிக்கை உருவானது.

ஆனால், அதற்கு நேர்மாறாக வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கியுள்ளது.  தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா கடந்த வாரம் புதன் கிழமை (ஜன.5) சோதனை செய்தது.

இந்நிலையில், அந்த சோதனை நடைபெற்று ஒருவாரம் கூட நிறைவடையாத நிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா சோதனை செய்த ஏவுகணை ஜப்பான் கடல் பகுதி அருகே நிகழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story