சிலி மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்


சிலி மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 11 Jan 2022 8:42 AM GMT (Updated: 11 Jan 2022 8:42 AM GMT)

தென் அமெரிக்க நாடான சிலியில் 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது.

சாண்டியாகோ,

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் பெரும்பாலும் 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் எதிர்ப்பாற்றல் காரணமாக கொரோனா நம்மை பாதித்தாலும், தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பல விதமான உருமாற்றங்களை அடைந்து வருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமைக்ரான் என இந்த உருமாற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பொதுவாகவே வைரஸ் கிருமிகள் சூழலுக்கு ஏற்றவாறு உருமாற்றம் அடையும் தன்மை கொண்டவை என்பதால், தடுப்பூசிகள் எந்த அளவிற்கு இந்த உருமாற்றங்களை எதிர்த்து செயல்படும் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. 

எனவே உடலில் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும் விதமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. மேலும் பல நாடுகளில் முதியோர்கள் மற்றும் இனை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் தென் அமெரிக்க நாடான சிலியில் 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிலி அரசாங்கம் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. சுமார் 2 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில், சுமார் 1 கோடி பேர், இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 

தற்போது அங்கு தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12 வயது முதல் 55 வயது வரையிலான நபர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமாகி உள்ளது. இதன்மூலம், இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக 4-வது டோஸ் செலுத்திவரும் நாடாக சிலி மாறி உள்ளது.

Next Story