அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மேலும் ஒரு நகருக்கு பூட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Jan 2022 8:43 PM GMT (Updated: 11 Jan 2022 8:43 PM GMT)

அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக சீனாவில் மேலும் ஒரு நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பீஜிங், 

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்து வரும் சூழலில், கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்தமாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், அங்கு வைரஸ் தொற்று அதிகரித்து வருவது அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

இதன்காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஷியான் மற்றும் யூசோவ் ஆகிய 2 நகரங்கள் பூட்டப்பட்டுள்ளன.

அதாவது அந்த 2 நகரங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக அந்த 2 நகரங்களில் சுமார் 1½ கோடி பேர் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் 3-வது நகரமாக ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகருக்கு பூட்டுப்போடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த நகரில் வசிக்கும் சுமார் 55 லட்சம் பேர் தங்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

Next Story