ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 12 Jan 2022 3:30 AM GMT (Updated: 12 Jan 2022 3:30 AM GMT)

ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் நேரில் பார்வையிட்டுள்ளார்.

பியோங்யங்,

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், கடந்த வாரம் புதன்கிழமை (ஜன.5) தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா பரிசோதனை செய்தது. 

அந்த சோதனை நடைபெற்று 7 நாட்கள் முடிவதற்கு முன்னர் நேற்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான், தென்கொரியா தெரிவித்தது. ஆனால், அந்த சோதனை தொடர்பாக வடகொரியா தரப்பில் எந்த வித அதிகாரப்பூர்வ தகவல்களும் நேற்று வெளியாகவில்லை.

இந்நிலையில், ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக சோதித்துவிட்டதாக வடகொரியா இன்று தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வடகொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஹைபர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதியில் நடைபெற்ற இந்த ஏவுகணை சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டுள்ளார். ஏவுகணை சோதனையை கிம் பார்வையிடுவதும், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்து போன்ற புகைப்படத்தை வடகொரிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Next Story