சீனா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகரிப்பு


சீனா முழுவதும் கொரோனா  கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2022 3:51 PM GMT (Updated: 14 Jan 2022 3:51 PM GMT)

சீனா நாட்டில் உகானில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பெய்ஜிங்,

சீனா நாட்டில் உகானில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி, 31 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஜீரோ கொரோனா கொள்கை என்ற அடிப்படையை பின்பற்றும் சீனா, ஒரு சிலருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் அந்த நகரத்தையே முழுவதுமாக முடக்கி வருகிறது. 

சீனாவில் சில வாரங்களில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளதால், தற்போது அந்நாட்டில் மீண்டும் தொற்று பாதிப்பு கண்டறியப்படுவது அந்நாட்டிற்கு பெரும் தலைவலியாய் அமைந்துள்ளது.  இந்த நிலையில், சீனா முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் பரவலாக கடுமையாக்கப்பட்டுள்ளன. 

சர்வதேச பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசிய தேவையின்றி மக்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணம் செய்யும் பட்சத்தில் சென்ற ஊர்களில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டு இருந்தால், மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு கட்டுப்பாடுகள் இன்றி திரும்புவதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை எனவும் சீனா தெளிவுபடுத்தியுள்ளது.   

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து வெறும் ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள தியான்ஜின் நகரத்தில் மூன்றாவது முறையாக மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 


Next Story