பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் என்ன கோளாறு? ஆராய மருத்துவ நிபுணர்கள் குழு


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் என்ன கோளாறு? ஆராய மருத்துவ நிபுணர்கள் குழு
x
தினத்தந்தி 15 Jan 2022 5:32 PM GMT (Updated: 2022-01-15T23:02:01+05:30)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் என்ன கோளாறு என்று ஆராய 9 மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவை பஞ்சாப் மாகாண அரசு அமைத்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 72), உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் சென்றார். அதன்பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. இதனால் அவர் மீதான ஊழல் வழக்குகள் நிலுவையில் போடப்பட்டுள்ளன. நாடு திரும்பி, வழக்குகளை எதிர்கொள்கிற அளவுக்கு அவரது உடல்நிலை உகந்ததாக இல்லை என்று அவர் தரப்பில் கோர்ட்டில் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஆராய்வதற்கு மருத்துவ குழு அமைக்க வேண்டும் என்று பஞ்சாப் மாகாண அரசுக்கு அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் அலுவலகம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலையில் என்ன கோளாறு உள்ளது என்பதை கண்டறிவதற்காக 9 மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவை பஞ்சாப் மாகாண அரசு அமைத்துள்ளது.

பேராசிரியர் டாக்டர் முகமது ஆரிப் நயீம் என்பவரது தலைமையிலான இந்த நிபுணர்கள் குழு, நவாஸ் ஷெரீப்பின் டாக்டர் டேவிட் லாரன்ஸ் அளித்துள்ள மருத்துவ அறிக்கையை ஆராய்ந்து, நவாஸ் ஷெரீப் உடல் நிலையில் என்னதான் கோளாறு என்பது குறித்து 5 நாட்களுக்குள் சுகாதாரத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிப்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.


Next Story