வெடிபொருட்கள் கொண்டு சென்ற லாரி மீது பைக் மோதி வெடிவிபத்து - 17 பேர் பலி


Image Courtesy: ABC News
x
Image Courtesy: ABC News
தினத்தந்தி 21 Jan 2022 3:18 AM GMT (Updated: 2022-01-21T08:48:48+05:30)

சுரங்க வேலைக்காக வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு லாரி மீது பைக் மோதியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

அகரா,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கானா. இந்நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்திற்கு சுரங்க வேலைகள் செய்ய தேவையான வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி இன்று பொகாசா என்ற நகர் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தது.

அபியெட் என்ற பகுதியில் சந்தைப்பகுதியில் லாரி சென்றபோது வேகமாக வந்த பைக் மோதியுள்ளது. இந்த விபத்தில் லாரியில் தீப்பற்றியுள்ளது. இதனால், சரக்கு லாரியில் இருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த கோர வெடி விபத்தில் சந்தைப்பகுதி முழுவதும் நிலைகுலைந்தது. சக்திவாய்ந்த அதிக அளவிலான வெடிமருந்து வெடித்ததில் அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகின.

இந்த வெடிவிபத்தில் 17 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.   

Next Story