“கிளிமாஞ்சாரோ” பாடல் படம்பிடித்த இடம் - நிலச்சரிவால் மலைப்பாதைகள் துண்டிப்பு


“கிளிமாஞ்சாரோ” பாடல் படம்பிடித்த இடம் - நிலச்சரிவால் மலைப்பாதைகள் துண்டிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2022 12:33 PM GMT (Updated: 22 Jan 2022 12:33 PM GMT)

வெள்ள மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சுவிற்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

லிமா,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, மலைப்பகுதிகள் மற்றும் மழைக்காடுகளை அதிக அளவில் கொண்ட நாடாகும். அங்குள்ள ‘மச்சு பிச்சு’ என்ற 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மலை நகரம் உலகப் புகழ் பெற்றது. இதைக் காண உலகெங்கிலும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பெரு நாட்டிற்கு வருகை தருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தில் முதல் முறையாக இந்த மச்சு பிச்சு மலைகள் இடம்பெற்றன. அந்த படத்தில் வரும் ‘கிளிமாஞ்சாரோ’ பாடல் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது. 

இந்நிலையில் அந்த மலைப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட பெருமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மச்சு பிச்சு செல்லும் பாதை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் சேற்றால் நிரம்பியுள்ளன. 

மேலும் அங்குள்ள அல்கமேயோ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மச்சு பிச்சு பகுதிக்கு செல்லும் சாலைகள் மற்றும் ரெயில் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனை தொடர்ந்து மச்சு பிச்சு செல்வதற்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக பெரு அரசு அறிவித்துள்ளது. 

Next Story