ஒமைக்ரானின் புதிய வடிவத்தை அறிவித்தது இங்கிலாந்து; 400- க்கும் மேற்பட்டோர் பாதிப்பு


ஒமைக்ரானின் புதிய வடிவத்தை அறிவித்தது இங்கிலாந்து; 400- க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2022 12:10 AM GMT (Updated: 23 Jan 2022 12:28 AM GMT)

இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரானின் புதிய வடிவம் அறிவிக்கப்பட்டிருப்பது, கொரோனா எப்போது ஒழியப்போகிறது என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன், 

இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரானின் புதிய வடிவம் அறிவிக்கப்பட்டிருப்பது, கொரோனா எப்போது ஒழியப்போகிறது என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் சீன மண்ணில் 2019 டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்டது. தொடர்ந்து அது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றங்களை அடைந்து வருகிறது. அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 24-ந் தேதி ஒமைக்ரான் வைரஸ் (பிஏ.1) கண்டறியப்பட்டு இன்றைக்கு அதுவும் உலகமெங்கும் பரவி உள்ளது. இந்த வைரசை கவலைக்குரிய மாறுபாடாக உலக சுகாதார அமைப்பு நவம்பர் 26-ந் தேதி வகைப்படுத்தியது. இந்த நிலையில் ஒமைக்ரானின் புதிய வடிவம், இங்கிலாந்து நாட்டில் அறிவித்து, வகைப்படுத்தப்பட்டு இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வடிவத்துக்கு ‘பிஏ.2’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது விசாரணையின் கீழ் உள்ள மாறுபாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய வடிவ ஒமைக்ரான் பாதிப்புக்கு அங்கு 426 பேர் ஆளாகி உள்ளனர்.

இதுபற்றி இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “ஒட்டுமொத்தமாக அசல் ஒமைக்ரான் பரம்பரை ‘பிஏ.1’, இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ‘பிஏ.2’ பாதிப்பு விகிதம் தற்போது குறைவாக உள்ளது” என தெரிவித்துள்ளது.

40 நாடுகளில் ‘பிஏ.2’ மாறுபாடு பரவி இருக்கிறது. 8,040 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இது எங்கிருந்து தோன்றியது என்று தீர்மானிக்க முடியாது என்று இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் சொல்கிறது. முதல் வரிசை மாதிரிகள் பிலிப்பைன்சில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதிக மாதிரிகள் டென்மார்க்கில் (6,411) பதிவாகி உள்ளது. இந்தியாவில் 530, சுவீடனில் 181, சிங்கப்பூரில் 127 என பதிவாகி இருப்பதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு முகமை சொல்கிறது.

இதுபற்றி அந்த அமைப்பின் சம்பவ இயக்குனர் மீரா சந்த் கூறுகையில், “தொற்று நோய் தொடர்வதால் புதிய மாறுபாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ‘பிஏ.2’ ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள ‘பிஏ.1’ஐ விட கடுமையான நோயை ஏற்படுத்துகிறதா என்பதை தீர்மானிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. தரவு குறைவாக உள்ளது. இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு முகமை தொடர்ந்து விசாரணை நடத்துகிறது” என தெரிவித்தார்.

இப்படி புதிது புதிதாக உருமாற்றங்கள் கண்டுபிடிப்பது உலக மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. கொரோனாவே, நீ ஒழியப்போகிற நாள் எந்நாள், அதுவே உலகத்துக்கு நன்னாள் என்று சொல்வதை தவிர்க்க முடியவில்லை.


Next Story