பிரான்சில் கொரோனா சான்றிதழ் கட்டாயம்; எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


பிரான்சில் கொரோனா சான்றிதழ் கட்டாயம்; எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2022 3:25 AM GMT (Updated: 23 Jan 2022 3:25 AM GMT)

பிரான்சில் பொது இடங்களுக்கு செல்வதற்கு கொரோனா சான்றிதழ் காட்டாயம் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


பாரீஸ்,


கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிப்பை சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு ஏற்கனவே கொரோனா வைரசின் 3-வது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில் 4-வது அலை எந்த நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றது.

கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி சரியான ஆயுதம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள, மக்களை பல்வேறு வழிகளில் கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்த சூழலில் அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை முதல் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் உணவகங்கள், வணிக வளாகங்கள், பார்கள், பொது போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்  என்று அரசு உத்தரவிட்டுள்ளது.   

இந்த உத்தரவுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக்காரர்கள் ஒருவர் கூறியதாவது, தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது தங்களின் சுதந்திரத்திற்கு எதிரானது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகின்றது. இதனால் தடுப்பூசி போட்டு கொள்வதால் என்ன பயன். மேலும் இது போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதித்து வந்தால் தொடர் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.




Next Story