உக்ரைன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து: ஜெர்மனி கடற்படை தளபதி ராஜினாமா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Jan 2022 8:21 PM GMT (Updated: 23 Jan 2022 8:21 PM GMT)

உக்ரைன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஜெர்மனி கடற்படை தளபதி ராஜினாமா செய்தார்.

பெர்லின், 

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடிக்கும் நிலையில் சமீபகாலமாக உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது.

உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில் ரஷியா படைகளை குவித்து வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஜெர்மனி, உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு முறைபயணமாக இந்திய வந்திருந்த ஜெர்மனி கடற்படை தளபதி கே-அச்சிம் ஷொன்பாக், ராணுவ ஆராய்ச்சி கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் “ரஷியா உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்புகிறது என்ற எண்ணம் முட்டாள்தனமானது. அதிபர் புதின் விரும்புவது மரியாதை மட்டுமே. அதற்கான தகுதியும் புதினுக்கு உள்ளது” என கூறினார்.

கடற்படை தளபதியின் இந்த பேச்சு உக்ரைனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக ஜெர்மனி தூதரை நேரில் அழைத்து புகார் அளித்தது. இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, கடற்படை தளபதி கே-அச்சிம் ஷொன்பாக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.


Next Story