சிரியாவில் குர்து படைகள்-ஐ.எஸ். பயங்கரவாதிகள் இடையே பயங்கர மோதல்: 100 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Jan 2022 9:21 PM GMT (Updated: 2022-01-24T02:51:59+05:30)

தங்கள் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் போராளிகளை விடுவிக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றினர்.

டமாஸ்கஸ், -

சிரியாவில் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலை தூக்கி வருகின்றனர். குறிப்பாக சிரியாவின் வடகிழக்கில் குர்து இன போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பெருகி வருகிறது.

இந்த நிலையில் குர்து இன போராளிகளின் வசம் உள்ள ஹசாகா நகரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

சிறையை தகர்த்து, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கள் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் போராளிகளை விடுவிக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றினர்.

எனினும் சிறையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குர்து இன போராளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி பயங்கரவாதிகள் சிறையை நெருங்க விடாமல் தடுத்தனர்.

இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பல மணி நேரம் நீடித்த இந்த பயங்கர மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 77 பேர் கொல்லப்பட்டனர்.

அதே வேளையில் குர்து இன போராளிகள் 39 பேரும் பலியாகினர்.


Next Story