தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்து - 7 வீரர்கள் காயம்


தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்து - 7 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 25 Jan 2022 3:22 AM GMT (Updated: 2022-01-25T08:52:37+05:30)

தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.

வாஷிங்டன்,

தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் அப்பகுதியில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அப்பகுதிகளில் அமெரிக்காவின் போர் விமானங்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கர்ல் வென்சன் போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த போர் கப்பலில் இருந்து போர் விமானங்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, பயிற்சிக்கு பின்னர் எஃப் 35சி ரக போர் விமானம் ஒன்று போர் கப்பலில் தரையிறங்க முயற்சித்தது. அப்போது, போர் கப்பலில் உள்ள விமான ஓடுதளத்தில் போர் விமானம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் போர் கப்பலில் இருந்த 7 வீரர்கள் காயமடைந்தனர். போர் விமானத்தின் விமானி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். அவர் விமானத்தில் இருந்து வெளியேறி கடலில் குதித்துள்ளார். பின்னர், பிற அமெரிக்க வீரர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த வீரர்கள் 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரையிறங்கும்போது போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story