அமெரிக்காவில் பனிப்பொழிவால் பாலம் உடைந்து விழுந்து 10 பேர் படுகாயம்


அமெரிக்காவில் பனிப்பொழிவால் பாலம் உடைந்து விழுந்து 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Jan 2022 4:51 PM GMT (Updated: 29 Jan 2022 4:51 PM GMT)

அமெரிக்காவில் பனிப்பொழிவால் பிரமாண்ட பாலம் உடைந்து விழுந்ததில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

வாஷிங்டன், 

கடுமையான பனிப்பொழிவு

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது.

இதனால் வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன. மேலும் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் பனித்துகள்கள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

பாலம் உடைந்து விழுந்தது

இந்த நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் பனிப்பொழிவு காரணமாக 50 ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான பாலம் ஒன்று உடைந்து விழுந்தது.

பாலத்தில் அளவுக்கு அதிகமான பனித்துகள்கள் குவிந்து கிடந்த நிலையில் அதிகாலை நேரத்தில் பாலம் திடீரென 3 பாகமாக உடைந்து விழுந்தது. பாலம் உடையும்போது அதில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் உள்பட பல வாகனங்களும் கீழே விழுந்தன.

இந்த விபத்தில் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. அதே போல் பஸ் ஒன்று பாலத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது. எனினும் இந்த விபத்தில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.

10 பேர் படுகாயம்

அதே சமயம் பாலம் உடைந்து விழுந்ததில் ஏற்பட்ட பள்ளத்தில் பலர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 10 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அருகில் இருந்த சக வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கியிருந்த அனைவரையும் கயிறு மூலம் மீட்டனர். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த 10 பேரும் ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விபத்து நடந்த பிட்ஸ்பர்க் நகருக்கு செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு பாலம் உடைந்து விழுந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஜோ பைடன் நேரில் பார்வை

தனது சொந்த மாகாணமான பென்சில்வேனியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பிட்ஸ்பர்க் நகருக்கு சென்று உரையாற்ற ஜோ பைடன் திட்டமிட்டிருந்தார். இந்த சூழலில்தான் அங்கு பாலம் உடைந்து விழுந்தது. எனினும் ஜோ பைடன் தனது பயண திட்டத்தை மாற்றியமைக்காமல் பிட்ஸ்பர்க் நகருக்கு சென்று விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவர் பாலம் உடைந்த விபத்தில் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதது மிகப்பெரிய அதிசயம் என வியப்பு தெரிவித்தார். மேலும் நாட்டில் உள்ள பாலங்களின் உறுதித்தன்மை கண்டறியப்பட்டு சீரமைப்பு செய்யப்படும் என உறுதியளித்தார்.

5 ஆயிரம் விமானங்கள் ரத்து

இதனிடையே நியூயார்க் நகரம் உள்பட அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளை ஞாயிறு கெனன் என்கிற பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனி மற்றும் பலத்த காற்றுடன் இந்த புயல் தாக்கும் எனவும், 15 செ.மீ. வரை பனி பொழியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.


Next Story