ஆப்கானிஸ்தானில் உணவுக்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள்


ஆப்கானிஸ்தானில் உணவுக்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:02 PM GMT (Updated: 29 Jan 2022 5:02 PM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியுதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நாட்டை முழுமையாக தங்கள் வசமாக்கினர்.

அதை தொடர்ந்து அவர்கள் அங்கு இடைக்கால அரசை அமைத்தனர். ஆனால் தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியுதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆப்கான் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் பட்டினி சாவு மற்றும் வறுமையை போக்க மக்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உடல் உறுப்புகளை விற்பனை செய்வது அந்த நாட்டின் சட்டப்படி குற்றம் என்றபோதிலும் உயிர்பிழைப்பதற்கு தங்களுக்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை என ஹெரட் மாகாண மக்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டும் இன்றி பசியை போக்குவதற்காக பெற்றோர் சிலர் தங்களின் பிள்ளைகளை விற்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story