போரில் களமிறங்கிய உக்ரைன் இளம்பெண்... ரஷிய பீரங்கி மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு


போரில் களமிறங்கிய உக்ரைன் இளம்பெண்... ரஷிய பீரங்கி மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு
x
தினத்தந்தி 1 March 2022 7:59 AM GMT (Updated: 2022-03-01T13:29:05+05:30)

ரஷிய பீரங்கி மீது உக்ரைன் இளம்பெண் ஒருவர் காரில் சென்றபடி, பெட்ரோல் வெடிகுண்டு ஒன்றை வீசி செல்லும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.


கீவ்,


உக்ரைன் மீது முன்அறிவிப்பின்றி மற்றும் நியாயமற்ற முறையில் நடத்தப்படும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி ஐ.நா. அமைப்பு சிறப்பு கூட்டத்தில் நேற்று அழைப்பு விடப்பட்டது.  ஆனால், அண்டை நாடான உக்ரைன் மீது நடத்தும் தனது போரை நியாயப்படுத்திய ரஷியா, சொந்த மக்கள் மீது பகைமையுடன் உக்ரைன் நடந்து கொள்கிறது என கூட்டத்தில் தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை.  ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.

தொடர்ந்து உக்ரைனின் ராணுவ தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா தாக்குதலை தொடுத்து வருகிறது.  ரஷிய ராணுவ படைகளின் அணிவகுப்புகளை வெள்ளை மாளிகை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.  இந்த நிலையில், கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கியுள்ளன.  இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ஆன்டனோவ் விமான நிலையத்திற்கு அருகே சாலை முழுவதும் படைகள் ஆக்கிரமித்து காணப்படுகின்றன.  இந்த படைகள் பயணம் செய்து வரும் இவான்கீவ் நகருக்கு வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் அமைந்த சாலைகள் அருகே பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காட்சிகளும் புகைப்படங்களில் காணப்படுகின்றன.

இதுதவிர்த்து, உக்ரைன் எல்லையையொட்டி 20 மைல்கள் வடக்கே, தெற்கு பெலாரஸ் பகுதியில் கூடுதல் தரை படைகளும், தரைகளை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர் படை பிரிவுகளும் குவிக்கப்பட்டு உள்ள புகைப்படங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.  இதுபோன்ற பெரிய படைகளை கண்டு அச்சம் தெரிவித்து உள்ள அதிகாரிகள் பலர், உக்ரைனில் சமீபத்திய வன்முறை, பொதுமக்கள் படுகொலைகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றை பற்றியும் கவலை தெரிவித்து உள்ளனர்.

தொடக்கத்தில், ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் ஆக்ரோஷ எதிர்ப்புகளை கண்டு அதிர்ச்சியடைந்தபோதும், தற்போது சூழ்நிலை அவர்களுக்கு அதிக சவாலாக உள்ளது என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது.  இதில், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்கு இடையே ஆக்டைர்கா என்ற பகுதியில் உக்ரைனின் ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது.  இதனை இலக்காக கொண்டு நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 70 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், ரஷிய படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதுபற்றி உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை மந்திரி ஹன்னா மலையார் கூறும்போது, ரஷியாவின் 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள், 146 பீரங்கிகள், 706 கவச வாகனங்கள், எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை ஒன்று மற்றும் 4,300 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.  2 ரஷிய கப்பல்களும் அழிக்கப்பட்டு விட்டன என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

ரஷிய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் போரில் இறங்கிய பல்வேறு வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.  இதில், இளம்பெண் ஒருவர் காரில் சென்றபடி, பெட்ரோல் வெடிகுண்டு ஒன்றை ரஷிய பீரங்கி மீது வீசி செல்லும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.  இதில், அந்த பீரங்கியின் கீழ் பகுதியில் குண்டு வெடித்து தீப்பற்றி எரிகிறது.  இதனை தனது காரில் இருந்தபடி அந்த இளம்பெண் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.


Next Story