8வது நாளாக நீடிக்கும் போர்: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த அமேசான்..!


8வது நாளாக நீடிக்கும் போர்: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த அமேசான்..!
x
தினத்தந்தி 3 March 2022 4:59 AM GMT (Updated: 3 March 2022 4:59 AM GMT)

உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கும் என்றும், தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் என்றும் அமேசான் சி.இ.ஓ. ஆண்ட்டி ஜெஸ்சி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 8.74 லட்சமாக இருப்பதாகவும், இது விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை வெளியிட்டு உள்ளது.

இந்த சூழலில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரானது 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனை உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே ரஷிய தாக்குதலால் கடுமையான பொருளாதார இழப்புகளையும் எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. ஆயுத உதவி, நிதி உதவியையும் அளித்து வருகின்றது.

இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நன்கொடைகள், இணைய பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமேசான் சி.இ.ஓ. ஆண்ட்டி ஜெஸ்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “உக்ரைன் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது. தொடர்ந்து உதவி செய்யும்.

அமேசான் மற்றும் எங்கள் ஊழியர்களிடமிருந்து பண நன்கொடைகள், தேவைப்படுபவர்களுக்கு பொருட்களைப் பெறுவதற்கான உபகரணங்கள் மற்றும்  அரசாங்கங்களுக்கு தேவையான இணைய பாதுகாப்பு உதவி ஆகியவற்றின் மூலம் தரையில் உள்ள மனிதாபிமான அரசு சாரா நிவாரண அமைப்புகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று அதில் ஆண்ட்டி ஜெஸ்சி பதிவிட்டுள்ளார். 



Next Story