ஐரோப்பாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டதாக தகவல்; உக்ரைன் போரால் ஏற்பட்ட சைபர் தாக்குதல் காரணமா..?


ஐரோப்பாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டதாக தகவல்; உக்ரைன் போரால் ஏற்பட்ட சைபர் தாக்குதல் காரணமா..?
x
தினத்தந்தி 5 March 2022 8:48 AM GMT (Updated: 5 March 2022 8:48 AM GMT)

ஐரோப்பாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.இதன் காரணமாக 5800 காற்றாலைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

பாரிஸ்,

ஐரோப்பாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை இணைய சேவை அளிக்கும் நிறுவனங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

இதன் காரணமாக மத்திய ஐரோப்பா மற்றும் ஜெர்மனியில் 5800 காற்றாலைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 11 கிகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் போரால் ஏற்படும் சைபர் தாக்குதல் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

பிரான்சில் இருக்கும் 9000 பயனாளர்கள் இணைய சேவை கிடைக்காமல் அவதியுற்றனர் என்று பிரான்சில் செயற்கைக்கோள் இணைய சேவை அளிக்கும்  நிறுவனமான நார்ட்நெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று நடைபெற்ற வியாசேட்(செயற்கைக்கோள்) நிகழ்ச்சியின்போது, செயற்கைக்கோள் இணைப்பில் ஏற்பட்ட இடையூறு காரணமாக அதன் பின்னர் இந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்நிகழ்ச்சியில் முக்கிய அமெரிக்க செயற்கைக்கோள் ஆபரேட்டர் நிறுவனம் ஒன்றும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்ச்சியில் செயற்கைக்கோள் இணைப்பில் ஏற்பட்ட இடையூறு காரணமாக  ஐரோப்பா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி, கிரீஸ், இத்தாலி மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள பிக்-ப்ளூ நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய சேவை பயன்பாட்டாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இணைய வசதி இல்லாமல் அவதிப்பட்டனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, காற்றாலைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஜெர்மனியின் எனெர்கான் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ‘ஐரோப்பாவில் செயற்கைக்கோள் இணைப்பில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, காற்றாலைகளின் தொலைநிலையில் இருந்து கண்காணிப்பது குறைந்த அளவிலேயே சாத்தியம்.

மேலும், ஆயிரக்கணக்கான காற்றாலைகளின் மின்-மாற்றிகளை கட்டுப்படுத்துவது என்பது தற்போதைய சூழலில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே சாத்தியமாகும்.

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் முதல் நாளான பிப்ரவரி 24 அன்று இந்த பிரச்சினைகள் அனைத்தும் தொடங்கின.

இதனால் காற்றாலைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், காற்றாலைகளை தொலைவிலிருந்து மீட்டமைக்கும் பணிகள் முன்பு போல இனிமேல் சாத்தியமாகாது’ என்று ஜெர்மனியின் எனெர்கான் நிறுவனம் தெரிவித்தது. 

இந்த நிலையில், இதுகுறித்து சைபர் நிபுணர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘சைபர் அர்மகெதோன்’ எனப்படும் மிகப்பெரிய சைபர் தாக்குதல் ஏற்பட உக்ரைன் மீதான ரஷியாவின் போர் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதன் தாக்கம் உக்ரைன்-ரஷியா மட்டுமன்றி உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Next Story