இம்ரான் கானுக்கு மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிகாரியின் பெயர் வெளியீடு


இம்ரான் கானுக்கு மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிகாரியின் பெயர் வெளியீடு
x
தினத்தந்தி 4 April 2022 8:33 AM GMT (Updated: 4 April 2022 8:33 AM GMT)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கு மிரட்டல் செய்தி வெளியிட்ட அமெரிக்க அதிகாரியின் பெயரை வெளிப்படுத்தி உள்ளார்.

லாகூர்,பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் என குற்றஞ்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. 

இம்ரான்கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.  இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று கூடியது.  நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தன.

ஆனால் அது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காசின் கானால் நிராகரிக்கப்பட்டது.  இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தின.

இதற்கு மத்தியில், நாடாளுமன்றத்திற்கு வராமல் தனது வீட்டில் இருந்தபடி உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தனது ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி இருப்பதால் ஆட்சியை கலைக்க வேண்டும். யார் ஆட்சி நடைபெற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும் என்று இம்ரான் கான் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த நகர்வுகள் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அவர் வெளிநாட்டு சதி என கூறியது அமெரிக்கா நாட்டை என நம்பப்படுகிறது.  இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட சூழலில், நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த இம்ரான் கானின் கட்சியினர், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் பாகிஸ்தானை இம்ரான் கான் காப்பாற்றுவார்.  அமெரிக்காவின் நண்பராக இருப்பவர் ஒரு துரோகி என கோஷங்களை எழுப்பி கானுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

இந்த சூழலில், பாகிஸ்தானின் தூதர் வழியாக அமெரிக்கா மிரட்டல் செய்தி விடுத்து உள்ளது என இம்ரான் கான் கூறியுள்ளார் என டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அந்த செய்தியில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார துறைக்கான துணை மந்திரி டொனால்டு லூ என்பவர் பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் வழியே மிரட்டல் செய்தியை விடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து கான் தப்பி விட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆசாத்துடனான சந்திப்பில் டொனால்டு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றும் கான் கூறியுள்ளார்.

கடந்த வாரம் பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே கான் உரையாற்றும்போது, வெளிநாடு ஒன்று எங்களுக்கு (பாகிஸ்தான்) செய்தி ஒன்றை அனுப்பியது.  அதில், கான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.  இல்லையெனில், அந்நாடு அதிகம் பாதிக்கப்படும் என தெரிவித்து இருந்தது என கூறினார். 

எனினும், தொடக்கத்தில் அமெரிக்கா என நாட்டின் பெயரை குறிப்பிட்ட கான் அதன்பின்பு, வெளிநாடு ஒன்று அச்சுறுத்தல் செய்தியை விடுத்தது என கூறினார்.  மார்ச் 8ந்தேதி அல்லது மார்ச் 7ந்தேதிக்கு முன்பு, அமெரிக்கா எங்களுக்கு அனுப்பிய... என கூறி நிறுத்தி பின்னர், அமெரிக்கா அல்ல.  ஒரு வெளிநாடு எங்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியது.

இதனை பற்றி நான் ஏன் பேசுகிறேன் என்றால்... ஒரு சுதந்திர நாடு இதுபோன்ற செய்தியை பெறுகிறது... இது எனக்கு எதிரானது மற்றும் நாட்டுக்கும் கூட என கூறியுள்ளார்.  அந்த செய்தி எனக்கு எதிரானது.  அரசுக்கு எதிரானது அல்ல என்றும் கான் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், பாகிஸ்தான் மன்னிக்கப்படும்.  இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதில் கூறப்பட்டது என அவர் தெரிவித்து உள்ளார்.  எனினும், இம்ரான் கானின் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்தது.  கானை பதவியில் இருந்து வெளியேற்ற அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என தெரிவித்தது.


Next Story