லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் "கணிக்க முடியாத விளைவுகள்" ஏற்படும் - ரஷியா எச்சரிக்கை


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 15 April 2022 7:04 PM GMT (Updated: 2022-04-16T12:23:34+05:30)

பிரயான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தியதற்கு தீவிரமாக பதிலடி கொடுப்போம் என ரஷியா எச்சரித்துள்ளது.


உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 52-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷியா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள்...

ஏப்ரல் 16, 12.00 PM

கீவ் மாகாணத்தில் ரஷிய படையினரால் கொன்று புதைக்கப்பட்ட 900 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது - உக்ரைன் அரசு தகவல்

ஏப்ரல் 16, 11. 30AM  

ரஷிய போர்க்கப்பல் மூழ்கியபோதே 3-ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டது" ரஷ்ய அரசு தொலைக்காட்சி கூறி உள்ளது.

ஏப்ரல் 16, 5.00 AM
 
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் "கணிக்க முடியாத விளைவுகள்"  ஏற்படும் - ரஷியா எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசு தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றினால், "கணிக்க முடியாத விளைவுகள்" ஏற்படும் என  அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ள்ளதாக  தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 16, 4.00 AM

ரஷியாவை ‘பயங்கரவாதத்தின் அரச ஆதரவாளராக’ நியமிக்குமாறு அமெரிக்காவிடம் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் ஜனாதிபதி ஜோ பைடனிடம்  ரஷியாவை "பயங்கரவாதத்தின் அரசு ஆதரவாளராக" அறிவிக்கமாறு வேண்டுகோள் விடுத்ததாக மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 16, 3.00 AM

ரஷிய கப்பல் மோஸ்க்வா மீது உக்ரைன் 2 ஏவுகணைகளை தாக்கியதாக அமெரிக்க அதிகாரி தகவல்

மூழ்கிய ரஷிய ஏவுகணை கப்பல் ‘மோஸ்க்வா’  இரண்டு உக்ரைன் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தற்போது நம்புகிறது என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் உயிரிழப்புகள் இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது, இருப்பினும் எண்ணிக்கை தெளிவாக இல்லை என அந்த அதிகாரி மேலும் கூறினார்.

ஏப்ரல் 16, 2.00 AM

மாரியுபோலில் நீடிக்கும் துப்பாக்கி சண்டை 

முற்றுகையிடப்பட்ட நகரத்தில் உள்ள ஒரு எஃகு ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள மரியுபோலில் உக்ரைன் ரஷியா இடையே கடுமையான சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 16, 1.00 AM

உக்ரைன் மைக்கோலேவில் ஷெல் தாக்குதலில் 5 பேர் பலி

உக்ரைன்  நகரமான மைகோலெய்வ் நகரில் ஷெல் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சக்தி வாய்ந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று மைகோலைவ் கவர்னர் விட்டலி கிம் டெலிகிராமில் தெரிவித்தார்.

ஏப்ரல் 16, 12.00 AM

கீவ் நகரில் 900 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியுள்ளதை தொடர்ந்து, அங்கு உக்ரைன் போலீசார் மற்றும் ராணுவம் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் அப்பாவி பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 900-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கீவ் பிராந்திய போலீஸ் படை தலைவர் ஆன்ட்ரிய் நெபிடோவ் கூறியுள்ளார்.

தெருக்களிலும், தற்காலிக புதைகுழிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த உடல்களில், துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் மக்களை தெருக்களில் நிற்க வைத்து ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

புச்சா நகரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீவிலும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷிய கிராமங்களில் உக்ரைன் படைகள் குண்டு வீச்சு தீவிரமாக பதிலடி கொடுப்போம் என ரஷியா எச்சரிக்கை

கீவ், 

ரஷிய கிராமங்களில் உக்ரைன் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள ரஷிய ராணுவம், இதற்கு தீவிரமாக பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 50 நாட்களை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது. மிகப்பெரிய படை பலம் கொண்ட ரஷியா போரை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உக்ரைனை தன்வசமாக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உக்ரைன் வீரர்களின் பதில் தாக்குதல்களால் ரஷிய படைகள் முன்னேற முடியாமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கருங்கடலில் இருந்து உக்ரைன் மீதான கடல் வழி தாக்குதலுக்கு தலைமை தாங்கிவந்த ரஷியாவின் ‘மோஸ்க்வா’ போர்க்கப்பலை ஏவுகணைகள் மூலம் தாக்கி கடலில் மூழ்கடித்ததாக உக்ரைன் கூறியது. ஆனால் இதை மறுத்த ரஷியா வெடிப்பொருட்களால் கப்பலில் தீப்பிடித்ததாகவும், கடலில் மூழ்கவில்லை என்றும் கூறியது.

இந்த நிலையில் தங்களின் ‘மோஸ்க்வா’ போர்க்கப்பல் கடலில் மூழ்கியதை ரஷியா ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் தீப்பிடித்ததாலேயே கப்பல் கடலில் மூழ்கியதாகவும், எந்த வித தாக்குதலும் நடக்கவில்லை என்றும் ரஷிய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதே சமயம் கப்பல் தீப்பிடித்து, கடலில் மூழ்குவதற்கு முன்பாக அதிலிருந்த சிப்பந்திகள் 510 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக ரஷிய ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடல் வழி தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி வந்த போர்க்கப்பலை இழந்தது உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு ஒரு வரலாற்று தவறு என பரவலாக கருதப்பட்டு வரும் நிலையில் போர்க்கப்பலின் இழப்பு போரில் ரஷியாவுக்கான தோல்வியின் அடையாளமாக மாறியுள்ளதாக சர்வதே நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஒரு வேளை ரஷிய போர் கப்பலை உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தி கடலில் மூழ்கடித்தது உண்மையாக இருந்தால் பால்க்லாந்து போருக்கு (இங்கிலாந்து-அர்ஜென்டினா இடையே 1982-ல் நடந்த போர்) பிறகு போரின் போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாக ‘மோஸ்க்வா’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஷியாவின் பிரயான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள 2 கிராமங்களில் உக்ரைன் படைகள் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ரஷிய ராணுவம் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பிரயான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிளிமோவோ மற்றும் ஜுரவ்லேவ்கா ஆகிய 2 கிராமங்களில் உக்ரைன் படைகளின் குண்டு வீச்சால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

கிளிமோவோ கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், பொதுமக்களில் 7 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே போல் ஜுரவ்லேவ்கா கிராமத்தில் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல பொது உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்ததாகவும், தாக்குதலை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரயான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரயான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து உக்ரைன் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே பிரயான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தியதற்கு தீவிரமாக பதிலடி கொடுப்போம் என ரஷியா எச்சரித்துள்ளது. அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ஏவுகணை தாக்குதல்களை அதிகரிக்க உள்ளதாக ரஷிய ராணுவம் கூறியுள்ளது.

கீவ் நகரில் முன்னேற முடியாமல் ரஷிய படைகள் பின்வாங்கியதை தொடர்ந்து, அங்கு இயல்பு வாழ்க்கை மெல்ல, மெல்ல திரும்ப தொடங்கியிருக்கும் சூழலில் ஏவுகணை தாக்குதல்களை அதிகரிப்போம் என ரஷியா எச்சரிக்கை விடுத்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Next Story