ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல்; ஐ.நா. கடும் கண்டனம்


ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல்; ஐ.நா. கடும் கண்டனம்
x
தினத்தந்தி 1 May 2022 3:32 AM GMT (Updated: 1 May 2022 3:32 AM GMT)

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.


நியூயார்க்,


ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலீபான் பயங்கரவாதிகள் நடத்தி வந்த நீண்டகால போர் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் முடிவுக்கு வந்தது.  அமெரிக்க படைகளின் வாபசை தொடர்ந்து, தலீபான்களின் கைவசம் ஆட்சி சென்றது.

எனினும், பயங்கரவாத செயல்களில் இருந்து விலகி பொதுமக்களுக்கு உரிய நல்ல ஆட்சியை வழங்குவோம் என தலீபான்கள் கூறினர்.  ஆனால், தலீபான்களுக்கு அஞ்சி அந்நாட்டு மக்களில் பலர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.  அதிபராக இருந்த அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறினார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு நகரில் உள்ள உயர்நிலை பள்ளிக்கூடம் அருகே ஏப்ரல் 19ந்தேதி காலை மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் சாஹித் உயர்நிலை பள்ளி வளாகத்தின் அருகே அடுத்தடுத்த 3 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

அதேபோன்று டியூசன் சென்டர் அமைந்துள்ள பகுதியிலும் குண்டு வெடித்தது.  இதனையடுத்து அப்பகுதியில் தலிபான் படைகள் சுற்றிவளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன.  இந்த தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.

இதேபோன்று ஏப்ரல் 29ந்தேதி (நேற்று முன்தினம்) மசூதி ஒன்றின் மீது நடந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.  பலர் காயமடைந்தனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி பொதுமக்கள் மீது பொதுமக்களின் வீடு, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளின் மீது நடந்து வரும் இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஐ.நா. அமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று குண்டூசில் மசூதி ஒன்றின் மீது ஏப்ரல் 22ந்தேதி நடந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  ஏப்ரல் 28ந்தேதி 2 சிற்றுந்துகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  இதனை ஐ.எஸ். அமைப்பு நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பலர் காயமடைந்தனர்.  இதற்கும், ஐ.நா. அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்பு வகிக்கும் பயங்கரவாதிகள், அமைப்புகள், நிதி வழங்குவோர் மற்றும் ஆதரவு தெரிவிப்போர் என அனைவரையும் நீதியின் முன் கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பு மேற்கொள் காட்டியுள்ளது.


Next Story