சீனாவில் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்த முதியவரால் பரபரப்பு


சீனாவில் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்த முதியவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2022 3:01 AM GMT (Updated: 3 May 2022 3:01 AM GMT)

சீனாவில் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனையில் கூறப்பட்ட முதியவர் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.




பீஜிங்,


உலக நாடுகளில் முதன்முறையாக சீன நாட்டில் கொரோனா பாதிப்பு 2019ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டு பின்னர் பல நாடுகளுக்கு பரவ தொடங்கியது.  இதனால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.

சீனா, தற்போது கொரோனா தொற்று பரவலால் தத்தளிக்கிறது.  தொற்று பரவலை கட்டுப்படுத்த சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பல நகரங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது.

பல நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டுள்ள நிலையில், சீனா பொது முடக்கத்தாலும், கட்டுப்பாடுகளாலும் தவிக்கிறது.

இதன்படி, பீஜிங் நகரில் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட அனுமதி இல்லை. ஓட்டல்களில் உணவுகளை வாங்கி வீட்டுக்கு எடுத்து செல்ல மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

விரும்பிய இடங்களுக்கு நினைத்த நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.  அந்த நாட்டின் பொருளாதார தலைநகர் ஷாங்காய் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் 400 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், ஷாங்காய் நகரில் புட்டுவோ மாவட்டத்தில் உள்ள முதியோருக்கான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டார் என தவறுதலாக கூறப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவரை பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து சென்றனர்.

ஆனால், அவர் உயிருடன் இருந்துள்ளார்.  அவரது உடல் பாகங்கள் அசைந்துள்ளன.  இதனால், பரிசோதனை கூடத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதன் பின்னர் அவரது உடல்நலம் சீரடைந்தது.

இதனை உள்ளூர் அரசு நிர்வாகமும் உறுதி செய்தது.  இந்த சம்பவம் பற்றி அறிந்த ஷாங்காய் நகரவாசிகள் ஆத்திரமடைந்து, கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கடும் கட்டுப்பாடு உத்தரவுகளால், பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க கூடிய சூழல் காணப்படுகிறது.  அத்தியாவசிய மருத்துவ சேவையை கூட பெற முடியவில்லை என மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதுபற்றி அரசும் விசாரணை நடத்த கூட்டு குழு ஒன்றை அமைத்து உள்ளது.  இந்த சம்பவத்தில், 5 மாவட்ட அதிகாரிகள் மற்றும் முதியோர் மருத்துவமனையின் தலைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story