அவசர நிலை பிறப்பித்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு


அவசர நிலை பிறப்பித்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 May 2022 7:26 PM GMT (Updated: 7 May 2022 7:26 PM GMT)

இலங்கையில் போராட்டக்காரர்களை ஒடுக்க அவசர நிலை பிறப்பித்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

கொழும்பு, 

அவசர நிலை பிரகடனம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக, அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் பல வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த போராட்டங்களால் நெருக்கடி அதிகரித்து வருவதை தொடர்ந்து, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக நாடு முழுவதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்தார், அதிபர் கோத்தபய ராஜபக்சே.

இது முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அன்று நடந்த அவசர மந்திரிசபை கூட்டத்துக்கு பின் அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த முடிவை அறிவித்தார்.
இதன் மூலம், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோரை தன்னிச்சையாக கைது செய்து காவலில் வைக்க போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சிறப்பு அதிகாரம் வழங்கப்படுகிறது.

மனித உரிமை அமைப்பு

அதிபரின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை அமைப்புகள், வக்கீல் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் அரக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இலங்கையில் முற்றிலும் அமைதியான முறையிலும், வழக்கமான போலீசாரின் அதிகார வரம்புக்கு உட்பட்டும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த அவசர நிலை பிறப்பித்ததற்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்குமாறு அரசுக்கு மனித உரிமை அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

அவசர நிலை பிறப்பித்து இருப்பதற்கு கவலை வெளியிட்டுள்ள இலங்கை வக்கீல் சங்கம், போராட்டங்கள் எப்போதும் அமைதியாகவே நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளது. இந்த அவசர நிலை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

வெளிநாட்டு தூதர்கள் கவலை

இதைப்போல இலங்கை அவசர நிலை தொடர்பாக பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அந்த வகையில், இந்த அவசர நிலை இலங்கைக்கு உதவாது எனவும், நாட்டில் மீண்டும் ஒருமுறை அவசரநிலை பிறப்பித்திருப்பது கவலையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இங்கிலாந்து தூதர் சாரா ஹூல்டன் தனது டுவிட்டர் தளத்தில், ‘தற்போதைய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஜனநாயக மற்றும் அமைதியான அணுகுமுறை தேவை. அடிப்படை உரிமைகளுடன், அமைதியான போராட்டத்துக்கான உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார். இதைப்போல ஐரோப்பிய ஒன்றியம், கனடா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் இலங்கை அரசுக்கு கண்டனங்களையும், கவலையையும் பகிர்ந்துள்ளனர்.

ஆனால் இந்த அவசர நிலையை இலங்கை அரசு நியாயப்படுத்தி உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அரசியல் நிலைத்தன்மை மற்றும் சமூக அமைதி ஆகியவை முக்கிய தேவை என அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பிரதமருக்கு நெருக்கடி

இதற்கிடையே இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகுவதற்கான நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்தினம் நடந்த சிறப்பு மந்திரிசபை கூட்டத்திலும் பல மந்திரிகள், மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி உள்ளனர். மேலும் தனது சகோதரரும், பிரதமருமான மகிந்தவை ராஜினாமா செய்ய வைத்தாவது தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண கோத்தபய ஆர்வமாக இருந்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் தனக்கு பின் பதவியேற்கும் பிரதமரால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றால் பதவி விலக தயாராக இருப்பதாக மகிந்த அப்போது தெரிவித்து உள்ளார். எனினும் பதவி விலகுவது தொடர்பாக உறுதியான எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.

இவ்வாறு அதிபரும், பிரதமரும் தொடர்ந்து தங்கள் பதவிகளிலேயே நீடிக்க உறுதியாக இருப்பதால் இலங்கையின் நெருக்கடிக்கும், போராட்டங்களுக்கும் தற்போது முடிவு ஏற்படாது என்றே தெரிகிறது.



Next Story