இலங்கை பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாசா மறுப்பு - அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பை நிராகரித்தார்..!


கோப்புப் படம் ANI
x
கோப்புப் படம் ANI
தினத்தந்தி 8 May 2022 9:03 PM GMT (Updated: 8 May 2022 9:03 PM GMT)

இலங்கை பிரதமர் பதவியை ஏற்க அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுத்த அழைப்பை சஜித் பிரேமதாசா நிராகரித்தார்.

கொழும்பு, 

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அதிபருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளது. அவற்றை விரைவில் விவாதத்துக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் அக்கட்சி வற்புறுத்தி வருகிறது.

கடந்த 6-ந் தேதி நடந்த இலங்கை மந்திரிசபை கூட்டத்தை தொடர்ந்து, இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினருக்கு நெருக்கடி நிலை அதிக அதிகாரம் அளிக்கிறது.

இருப்பினும், அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பிறகு புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று இலங்கை பார் அசோசியேசனும், செல்வாக்கு மிக்க புத்தமத துறவியும், ஆளுங்கட்சி அதிருப்தியாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

அதிபர் நேற்று முன்தினம் சமாகி ஜன பலவேகயா தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு கேட்டுக்கொண்டார்.

அதுபோல், முன்னாள் அதிபர் சிறிசேனா, சஜித் பிரேமதாசாவை நேரில் சந்தித்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இந்தநிலையில், கோத்தபய ராஜபக்சே அழைப்பை சஜித் பிரேமதாசா நிராகரித்தார். "எங்கள் தலைவர், அதிபரின் அழைப்பை ஏற்க மறுத்து விட்டார்" என்று சமாகி ஜன பலவேகயாவின் தேசிய அமைப்பாளர் திஸ்சா அட்டநாயகே தெரிவித்தார். இதனால் இலங்கை அரசியலில் குழப்பநிலை நீடிக்கிறது.

இதற்கிடையே, நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதால், பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக இலங்கை ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு படையினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.

ராணுவ அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் ஜனநாயக நடைமுறைக்கு உட்பட்டு அமைதியாக போராட்டம் நடத்துவதற்கான உரிமையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் கடந்த சில நாட்களாக போராட்டம் திசைமாறி உள்ளது. மக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

எனவே, அமைதியை நிலைநாட்ட நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றத்தை தணிப்பதிலும், பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதிலும் ராணுவ அமைச்சகத்துக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story