அமெரிக்கா: வறண்டு வரும் ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்..!!


அமெரிக்கா: வறண்டு வரும் ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்..!!
x
தினத்தந்தி 11 May 2022 12:16 AM GMT (Updated: 2022-05-11T05:46:17+05:30)

அமெரிக்காவில் வறண்டு வரும் ஏரியில் இருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்தேக்கமான மீட் ஏரியில், கடந்த 2000-ம் ஆண்டு முதல் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கிடையில் காலநிலை மாற்றம் நிலைமையை தொடர்ந்து மோசமாக்கி வருவதால் மீட் ஏரி முற்றிலுமாக வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில் வேகமாக சுருங்கி வரும் மீட் ஏரியில் அடுத்தடுத்து மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 1-ந்தேதி முதன்முறையாக ஏரியின் கரையோரத்தில் சேற்றில் சிக்கிய பீப்பாய் ஒன்றில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இந்த உடல் 1970 அல்லது 80-களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவருடையது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாரத்துக்கு பின்பு மீட் ஏரியில் இருந்து மேலும் பல மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனினும் இதுபற்றிய கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வழங்காத நிலையில், ஏரி முழுமையாக வறண்டு போகும்போது மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்படலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story