கலவரத்தில் ஈடுபடுவோரை சுட்டுத்தள்ள ராணுவத்துக்கு உத்தரவு: இலங்கை அரசு அதிரடி


கலவரத்தில் ஈடுபடுவோரை சுட்டுத்தள்ள ராணுவத்துக்கு உத்தரவு: இலங்கை அரசு அதிரடி
x
தினத்தந்தி 11 May 2022 12:31 AM GMT (Updated: 2022-05-11T06:01:16+05:30)

இலங்கையில் கலவரத்தில் ஈடுபடுவோரை சுட்டுத்தள்ள ராணுவத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.

கொழும்பு,

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக மாறி விசுவரூபம் எடுத்து வருகிறது.

பொதுமக்கள் போராட்டம்

அண்டை நாடான இலங்கையில், 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கரைந்து போனது. இறக்குமதி நின்று போனது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை, விண்ணோடும், முகிலோடும் போட்டி போடுகிறது. பல மணி நேரம் மின்வெட்டு, நாட்டையே இருளில் தள்ளி உள்ளது.

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் பொதுமக்கள் கொதித்தெழுந்தார்கள். இத்தனைக்கும் காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் என்ற எண்ணம், அனைத்து மக்களின் இதயங்களிலும் ஆழமாய் பதிந்து போனது.

இதையடுத்து கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக கோரி தலைநகரான கொழும்புவில் காலிமுகத்திடலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுவந்து தொடர் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணிக்கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தியதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் நிலை குலைந்து போயினர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதுவும் எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை. மக்களின் எதிர்ப்பும், கோபாவேசமும் மேலும் வலுத்தது.

மகிந்த ராஜபக்சே ராஜினாமா

இந்த நிலையில், இதுவரையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்து, அதில் ஒட்டிக்கொண்டிருந்த மகிந்த ராஜபக்சே (வயது 76), நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்து பதவி விலகினார். ஆனால் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் தொடர்ந்து தங்கினார்.

ஒரு பக்கம் அரசு எதிர்ப்பு போராட்டம், மறுபக்கம் மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமா என இரண்டும், இருமுனையும் கூரான வாள்போல ராஜபக்சே குடும்ப ஆதரவாளர்களை தாக்கின. அவர்கள் கொந்தளித்தனர்.

வன்முறை கோரத்தாண்டவம்

அவர்கள் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது வெறிகொண்டு தடிகளாலும், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களாலும் தாக்குதல் தொடுத்தனர். போராட்டகள பந்தல்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. கொழும்பு நகரமே போர்க்களமாக மாறியது.

மற்றொரு பக்கம் போராட்டக்காரர்களும் கைவரிசை காட்டினர். அவர்கள், மந்திரிகள், ஆளும் கட்சி தலைவர்கள் இல்லங்கள் மீது தாக்குதல் நடத்தினர். கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். எங்கு பார்த்தாலும் வன்முறை, தீவைப்புகள் கோரத்தாண்டவமாடின.

எம்.பி. உள்பட 8 பேர் பலி

அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக்கொளுத்தினர். இந்த தாக்குதலை காட்டும் வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி பரவின. குருநாகலில் இருந்த மகிந்த ராஜபக்சேயின் வீடும் தீக்கிரையானது. கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தந்தையான டி.ஏ.ராஜபக்சேவின் நினைவு சின்னமும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வீரகெட்டிய பிரதேச சபைத்தலைவர் வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். பிரபல ஓட்டல் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இந்த வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். 217 பேர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு

வன்முறையின் உச்சமாக கொழும்புவில் மகிந்த ராஜபக்சே தங்கியிருந்த பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, அதனுள் நுழைய முயற்சித்தனர். போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டியடித்தனர்.

வன்முறை கோரத்தாண்டவமாடியதால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. தலைநகரில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். ஆனாலும் மக்கள் போராட்டத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை.

மகிந்த ராஜபக்சே வெளியேற்றம்

இந்தநிலையில், கொழும்புவில் பிரதமரின் அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்குள் நேற்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அந்த மாளிகை வளாகத்திற்குள் 10-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து அவர்களை ஆயுதம் தாங்கிய படையினர் அடித்து விரட்டினர்.

பாதுகாப்பு கருதி மகிந்த ராஜபக்சேவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் நேற்று காலையில் படையினரால் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய தகவல்கள் வெளியானதும் அங்கும் போராட்டக்காரர்கள் குவிந்து போராட்டம் நடத்தினர்.

வெளிநாடு தப்ப திட்டமா?

மகிந்த ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அப்படி அவரோ, அவரது ஆதரவாளர்களோ, எம்.பி.க்களோ தப்பி விடக்கூடாது என்று கருதி கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலின் குறுக்கே போராட்டக்காரர்கள் வாகனங்களை நிறுத்தி தடைகளை ஏற்படுத்தி உள்ளனர்.

ஆனால் மகிந்த ராஜபச்சேவின் மகனும், முன்னாள் மந்திரியுமான நமல் ராஜபக்சே, “எனது தந்தை நாட்டை விட்டு வெளியேறமாட்டார், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்யமாட்டார். அடுத்த பிரதமர் தேர்வில் அவர் முக்கிய பங்களிப்பு செய்ய விரும்புகிறார்” என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

இதற்கு மத்தியில் இலங்கையில் அரங்கேறி வருகிற வன்முறைக்கு கோத்தபய ராஜபக்சேவும், மகிந்த ராஜபக்சேவும்தான் காரணம் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறி உள்ளார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “அமைதியான போராட்ட இயக்கம், அரசின் ஆதரவுடன் வன்முறையால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வன்முறை கட்டவிழ்ப்புக்கு ராஜபக்சேக்கள்தான் காரணம். அவர்கள் இந்த குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்பட வேண்டும்” என கூறி உள்ளார்.

கைதுசெய்ய வலியுறுத்தல்

வன்முறையை தூண்டி விட்ட குற்றத்துக்காக மகிந்த ராஜபக்சேவையும், அவரது கூட்டாளிகளையும் கைதுசெய்ய வேண்டும் என்று வக்கீல்கள், போலீஸ் தலைமையகத்தில் மனு அளித்தனர்.

மகிந்த ராஜபக்சேவை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

இதே கோரிக்கையை முன்னாள் அதிபர் சிறிசேனா, பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சி தலைவர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரும் வலியுறுத்தி உள்ளனர். இதுபற்றி முன்னாள் அதிபர் சிறிசேனா கூறும்போது, “வன்முறையை ஊக்குவித்ததற்காக மகிந்த ராஜபக்சேவை கைதுசெய்ய வேண்டும். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த எந்த காரணமும் இல்லை” என்று கூறினார்.

மோதல்கள் குறித்து அவசர விசாரணை நடத்துமாறு போலீஸ் துறை தலைவருக்கு அட்டார்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்னம் உத்தரவிட்டார்.

சுட்டுத்தள்ள உத்தரவு

வன்முறையை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, ராணுவத்துக்கும், போலீஸ் படைக்கும் அவசர கால சிறப்பு அதிகாரங்களை வழங்கி உள்ளார். அவர்கள் பிடிவாரண்டு இன்றி யாரையும் கைது செய்ய முடியும். தனியார் கட்டிடங்கள், வீடுகள், வாகனங்களையும் அவர்கள் முன் அறிவிப்பின்றி சோதனை போடலாம். இதற்கான ‘கெஜட்’ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் ராணுவ அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளது.

அந்த அறிவிப்பு, கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கி இருப்பதாக கூறுகிறது.

ராணுவ தளபதி எச்சரிக்கை

இப்படி தொடர்ந்து பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ள இலங்கையில் அமைதியை கடைப்பிடிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராணுவ தளபதி சவேந்திரசில்வா எச்சரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story