உக்ரைன் மீதான ரஷியாவின் போரை தொடர்ந்து நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து அதிபர் விருப்பம்!


உக்ரைன் மீதான ரஷியாவின் போரை தொடர்ந்து நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து அதிபர் விருப்பம்!
x
தினத்தந்தி 12 May 2022 3:06 AM GMT (Updated: 2022-05-12T08:36:49+05:30)

ரஷியாவுடன் 1,300 கிமீ எல்லை தூரத்தை பகிர்ந்து கொண்டுள்ளது ஐரோப்பிய நாடான பின்லாந்து.

ஹெல்சின்கி,

வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய, பின்லாந்து அதிபர் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ இராணுவக் கூட்டணியில் பின்லாந்து சேருவதற்கு அதிபர் சவ்லி நினிஸ்டோ இன்று ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து, பாதுகாப்புக் கொள்கையில் ஏற்பட்டுள்ள  ஒரு பெரிய மாற்றம் இதுவாகும்.

ரஷ்யாவுடன் 1,300 கிமீ எல்லையையும் கடினமான கடந்த கால வரலாற்றையும் கொண்ட ஐரோப்பிய நாடான பின்லாந்து, உக்ரைன் போரை அடுத்து நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது.

2014 இல் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டதில் இருந்து, பின்லாந்து ஒரு கூட்டாளியாக நேட்டோ அமைப்புடனான தனது ஒத்துழைப்பை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் அது ரஷியா உள்பட அதன் கிழக்கு அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்காக நேட்டோவில் சேருவதைத் தவிர்த்தது.

இப்போது பின்லாந்து வெளியுறவுத்துறை தலைவரும் அந்நாட்டு அதிபருமான சவ்லி நினிஸ்டோ அந்நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நேட்டோ அமைப்பில் இணைய முடிவெடுத்துள்ளார். அவரது முடிவே இறுதியானதாக கருதப்படுகிறது.

இந்த முடிவுக்கு பின்லாந்து அரசும் நாடாளுமன்றமும் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story