ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன்: கோத்தபய அறிவிப்பு


ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன்:  கோத்தபய அறிவிப்பு
x
தினத்தந்தி 12 May 2022 3:33 AM GMT (Updated: 2022-05-12T09:03:58+05:30)

இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன் என கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார்.

கொழும்புதீவு நாடான இலங்கையில் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து, இறக்குமதிக்கும் வழியில்லாமல் போனது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை.  இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.  இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எனினும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். 217 பேர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கு இலங்கை அரசு அதிகாரம் அளித்துள்ளது.  இந்த சூழலில், திருகோணமலை தீவு ஒன்றில் ராஜபக்சே குடும்பம் மற்றும் முக்கிய முன்னாள் மந்திரிகள் தங்கியுள்ளனர் என்று கூறுப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த 2 வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன் என கூறினார்.

இலங்கையில் நிலவி வரும் பதற்ற நிலையை தணிக்கும் வகையில் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இந்த நிலையில், இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு அளிக்கப்படும் என்றும் பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என போப் பிரான்சிஸ் கேட்டு கொண்டுள்ளார்.  எனினும், ராஜபக்சே அரசுக்கு எதிராக கொழும்புவில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, அதற்கான பேனர்களை கைகளில் ஏந்தியபடி அவர்கள் போராட்டம் நடத்தினர்.  விதிகளை மீறி செயல்பட்டதற்காக அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து அரசுக்கு எதிரான கோஷங்கள் மக்களிடம் இருந்து எதிரொலித்து வரும் நிலையில், எண்ணற்ற தலைவர்களின் வீடுகள் மீது அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தும் சூழலில், கோத்தபய ராஜபக்சே கூறும்போது, இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன் என அறிவித்து உள்ளார்.  இந்த வாரத்தில் ஒரு புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

இந்த புதிய அமைச்சரவை அரசியல் சாசன சீர்திருத்தங்களை கொண்டு வரும் என கூறப்படுகிறது.  இதனால், ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் மனப்பான்மையில் சற்று மாற்றம் ஏற்படும்.  அதனுடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story