புதிய அரசு அமைந்தாலும் இலங்கையில் நீடிக்கிறது போராட்டம்..!


புதிய அரசு அமைந்தாலும் இலங்கையில் நீடிக்கிறது போராட்டம்..!
x
தினத்தந்தி 13 May 2022 9:11 AM GMT (Updated: 13 May 2022 9:11 AM GMT)

இலங்கையில் புதிய அரசு அமைந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

கொழும்பு,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ராஜபக்சே சகோதரர்கள் அரசில் இருந்து வெளியேற வேண்டும் எனக்கோரி நடந்து வந்த போராட்டத்தின் காரணமாக கடந்த 9-ந்தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.அத்துடன் நாடு முழுவதும் கலவரமும் வெடித்தது. மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இடையே நிகழ்ந்த வன்முறையில் எம்.பி., போலீஸ்காரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2 நாட்கள் நீடித்த வன்முறை யில் ராஜபக்சேக்களின்பூர்வீக வீடு, பெற்றோரின் நினைவிடம், எம்.பி.க்கள்-மந்திரிகள் என அரசியல் தலைவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடிய இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை களமிறக்கிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, வன்முறையாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் வழங்கினார். அத்துடன் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் வன்முறை சம்பவங்கள் ஓய்ந்து நாடு முழுவதும் அமைதி திரும்பியது.  இதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். 

ஒருங்கிணைந்த அரசை அமைக்கும் பணியில் விக்ரமசிங்கே ஈடுபட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடப் போவது இல்லை  என்று அறிவித்துள்ளனர். கொழும்பு நகர வீதிகளில்  பதாகைகளை ஏந்தியபடி அரசுக்கு எதிராக பலர் போராடியதை காண முடிந்தது. 


Next Story