#லைவ் அப்டேட்ஸ்:இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவுடனான போர் முடிந்துவிடும்- உக்ரைன்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 14 May 2022 12:45 AM GMT (Updated: 14 May 2022 8:12 AM GMT)

போரில் பலியான ரஷிய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

கீவ், 

உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-  

மே 14,  13.45 

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவுடனான போர் முடிந்துவிடும் என உக்ரைன் ஜெனரல் கூறி உள்ளார்.

ரஷியாவுடனான போர் ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஒரு திருப்புமுனையை எட்டும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் அது முடிவுக்கு வரும் என்றும் உக்ரைனின் ராணுவ உளவுத்துறையின் தலைவர் கூறியுள்ளார்.

உக்ரைனின் ராணுவ உளவுத்துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாவது :-

ஆகஸ்ட் மாதத்தில் போர் ஒரு திருப்புமுனையை எட்டும். பெரும்பாலான தீவிரமான போர் நடவடிக்கைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும்

இதன் விளைவாக, டான்பாஸ் மற்றும் கிரிமியா உட்பட நாங்கள் இழந்த அனைத்து நகரங்கலையும்  மீட்போம்.

போரில் ரஷியா தோல்வியடைந்தால், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிரான சதிப்புரட்சிக்கு வழிவகுக்கும் இது ஏற்கனவே நடந்து வருகிறது.

அதிபர் புதின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில்  இருப்பதாகவும், அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார்" என்றும் அவர் கூறினார். 

மே 14,  06.00 a.m 

ரஷியா 'பெரிய அளவிலான உணவு நெருக்கடியை' தூண்டுகிறது: ஜெலென்ஸ்கி

உக்ரைனின் துறைமுகங்களைத் தடுப்பதன் மூலம் ரஷியா "பெரிய அளவிலான உணவு நெருக்கடியை" தூண்டி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

"ரஷிய அதிகாரிகளும் டஜன் கணக்கான நாடுகளில் பஞ்சம் ஏற்படும் என்று உலகை வெளிப்படையாக அச்சுறுத்துகின்றனர். அத்தகைய பஞ்சத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும்? இது அரசியல் ஸ்திரமின்மை மற்றும் இடம்பெயர்வுகளுக்கு வழிவகுக்கும்? பின்விளைவுகளைச் சமாளிக்க நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டி வரும்?"என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 14,  05.51 a.m 

ரஷிய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார்: உக்ரைன் அரசு

கீவ் மற்றும் செர்னிஹிவ் பிராந்தியங்களில் போரின்போது சேகரிக்கப்பட்ட ரஷிய வீரர்களின் உடல்களை உக்ரேனிய இராணுவ அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட ரெயில் வண்டிகளில் ஏற்றியுள்ளனர்.

உக்ரைனின் சிவில்-இராணுவ ஒத்துழைப்பின் தலைவரான வோலோடிமர் லியாம்சின், தனது நாடு சர்வதேச சட்டத்தின்படி செயல்படுவதாகவும், உடல்களை ரஷியாவிற்கு திருப்பி அனுப்ப தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மே 14,  05.14 a.m 

போரின் நீளத்தை யாராலும் கணிக்க முடியாது - ஜெலென்ஸ்கி

ரஷியப் படைகளை விரட்ட உக்ரேனியர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள் என்றாலும், "இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை இன்று யாராலும் கணிக்க முடியாது" என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்தவும், உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் நிதி உதவியை அதிகரிக்கவும் பாடுபடும் அனைவருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மே 14,  04.48 a.m 

உக்ரைனை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷியாவின் தோல்வி வெளிப்படையானது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். எனினும் வான்வெளித் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் உண்மையை மறைக்க ரஷிய படைகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மே 14,  03.18 a.m 

நேட்டோ அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் மற்றும் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ ஆகியோருடன் ஜோ பைடன்  தொலைபேசி மூலம் பேசினார். உக்ரைன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களுக்கு ஆதரவு அளிக்கும் உறுதிபாடு குறித்து இரு தலைவர்களுடன் பைடன் விவாதித்தாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14, 02.42 a.m 

உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3,573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது, கனரக பீரங்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பெரும்பாலான பொதுமக்கள் உயிரிழப்புகள் ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.

மே 14,  01.19 a.m 

உக்ரைனுக்கு ராணுவ உதவி உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.  ரஷிய ஆக்ரமிப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர்  பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.

மே 14,  12.46 a.m 

உக்ரைனிய படைகள் ஒரு ஆற்று பாலத்தை அழித்ததால், ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாய் வசப்படுத்தும் முயற்சியில் ரஷிய படைகள் கடந்த பல நாட்களாக தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. இந்த நிலையில் ரஷியாவின் ஒரு படைப்பிரிவினருக்கு துயர முடிவு நேரிட்டுள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் வழியாக சிவர்ஸ்கி டொனெட்ஸ் என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு மிதக்கும் பாலம் இருந்து வந்தது. ஆற்றைக் கடந்து வருவதற்கு இந்த பாலம் ரஷிய படைகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது.

இதை அறிந்து நோட்டமிட்டு வந்த உக்ரைன் படையினர் அந்தப் பாலத்தை அதிரடியாக தாக்கி அழித்தபோது, ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் ஆற்றில மூழ்கி பலியாகி விட்டதாக உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலத்தின் அருகே நிறுத்தப்பட்ட ராணுவ வாகனங்களையும் உக்ரைன் படையினர் தாக்கி அழித்தனர்.

இதுபற்றி இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் நேற்று கூறுகையில், “ரஷியா குறைந்தபட்சம் ஒரு படைப்பிரிவை இழந்துள்ளது” என தெரிவித்தது. இந்த பாலத்தை அழித்ததையொட்டிய படங்களை உக்ரைன் வான்வழிப்படைகள் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே உக்ரைன் அதிகாரிகள், கருங்கடலில் ரஷிய கப்பல் ஒன்றை தங்கள் படையினர் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உக்ரைனுக்கு முக்கிய வெற்றி ஆகும்.

உக்ரைனின் மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் கிரெமென்சுக் நகரில் இருந்த முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரஷிய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி அழித்தன. அந்த ஆலை மீது 12 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக பொல்டாவா பிராந்திய ராணுவ, சிவில் நிர்வாக தலைவர் டிமிட்ரோ லுனின் தெரிவித்தார். இந்த தாக்குதலால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்து எரிந்தது. ஆனாலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஆலை ரஷிய தாக்குதலுக்கு ஆளாகி தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story