பாகிஸ்தானில் பட்டப்பகலில் 2 சீக்கியர்கள் சுட்டுக் கொலை; பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கடும் கண்டனம்!


பாகிஸ்தானில் பட்டப்பகலில் 2 சீக்கியர்கள் சுட்டுக் கொலை; பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கடும் கண்டனம்!
x
தினத்தந்தி 15 May 2022 2:12 PM GMT (Updated: 15 May 2022 2:12 PM GMT)

பெஷாவரில் சீக்கிய குடிமக்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரில் இன்று பட்டப்பகலில் இரண்டு சீக்கியர்கள் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்த கொலைவெறி தாக்குதலில்,  42 வயதான சுல்ஜீத் சிங் மற்றும் 38 வயதான ரஞ்சீத் சிங் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் படலால் பகுதியில் மசாலாக் கடைகளை வைத்திருந்தனர். இன்று காலை அவர்கள் கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு  நபர்கள் அவர்களை சுட்டுக் கொன்றனர்.

இதற்கிடையில், சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த படுகொலைகளை கண்டித்து பெஷாவரில் போராட்டம் நடத்தினர். தலைமறைவான சந்தேக நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவரில் சீக்கிய குடிமக்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:-

“பாகிஸ்தான் இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உண்மையைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். கொலையாளிகள் கைது செய்யப்பட்டு, ஒரு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்த கொலையானது மாகாணத்தில் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சதி என கைபர் பக்துன்க்வா முதல் மந்திரி மஹ்மூத் கான் தெரிவித்தார். பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங் ஆகியோர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில்  சிறுபான்மையினரின் படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் சூழலில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. கடந்த செப்டம்பரில், பெஷாவரில் நன்கு அறியப்பட்ட சீக்கிய "ஹக்கீம்" (யுனானி மருத்துவப் பயிற்சியாளர்) பெஷாவரில் உள்ள அவரது கிளினிக்கில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2017 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக உள்ளனர். அதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள குறிப்பிடத்தக்க மத சிறுபான்மையினரில் சீக்கியர்கள், அஹ்மதியர்கள் மற்றும் பார்சிகளும் உள்ளனர்.

Next Story