வடகொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவால் பலி: தென்கொரியாவின் தடுப்பூசி உதவியை ஏற்குமா?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2022 7:56 PM GMT (Updated: 15 May 2022 7:56 PM GMT)

வட கொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தென்கொரியாவின் தடுப்பூசி உதவிகளை வடகொரியா ஏற்று பேரழிவை தடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சியோல், 

சீனாவின் நட்பு நாடாக, பக்கத்து நாடாக இருந்தாலும், வட கொரியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தப்பி வந்தது.

ஆனால் காற்று புகாத இடத்தில்கூட நுழைந்து விடுவேன் என்று சொல்லும்படியாக அங்கும் கொரோனா வைரஸ் புகுந்து விட்டது. கடந்த 12-ந் தேதி பியாங்யாங் நகரில் நடந்த ஆளும் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் இதை அந்த நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் அறிவித்து, உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அமல்படுத்தி உள்ளார்.

இதுவரை தடுப்பூசி நுழைந்திடாத அந்த நாட்டில் கொரோனா பரவல் பேரழிவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.

கடந்த மாதம் முழுவதும் நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அங்கு அதிகரிக்கத்தொடங்கியது. அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்தான் ஒமைக்ரான் வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலை அங்கும் தன் கைவரிசையை காட்டத்தொடங்கி இருப்பது உறுதியானது.

அங்கு நேற்று முன்தினம் வரை 27 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. நேற்று மேலும் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து விட்டது.

அங்கு 2 லட்சத்து 96 ஆயிரத்து 180 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு ஊடக நிறுவனம் கே.சி.என்.ஏ. அறிவித்துள்ளது. இதனால் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 ஆக உயர்ந்துள்ளதாம்.

2 கோடியே 60 லட்சம் பேர் வாழ்கிற அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் பெரிதாக இல்லை. யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதெல்லாம் உலக அரங்கை கவலைக்குள்ளாக்கி இருக்கின்றன.

நேற்று முன்தினம் இந்த தொற்று பற்றி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசித்தார். கொரோனா வெடிப்பை அவர் வரலாற்று ரீதியான எழுச்சி என குறிப்பிட்டார். மேலும் இந்த வெடிப்பை கூடிய சீக்கிரம் நிலைப்படுத்த அரசுக்கும், மக்களுக்கும் இடையே ஒற்றுமை வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

நேற்று கே.சி.என்.ஏ. கூறுகையில், “ 13 லட்சத்துக்கும் அதிகமானோர், பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்குவும், சிகிச்சை அளிக்கவும், பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளவர்களும், இன்ன பிற அறிகுறிகள் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்”் எனவும் தெரிவித்தது.

அனைத்து மாகாணங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் என நாடெங்கும் பொது முடக்கம் அமலில் இருப்பதாகவும், உற்பத்தி பிரிவுகள், குடியிருப்புகள் மூடப்பட்டுள்ளதாகவும், அனைத்து மக்களும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்தது.

ஆனாலும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் அதிகாரிகள் பொருளாதார, கட்டுமான, பிற திட்ட பணிகளை தொடரும்படி தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நாட்டுக்கு தென்கொரியாவும், சீனாவும் தடுப்பூசிகளை, மருந்துகளை உதவியாக அனுப்பி வைக்க முன் வந்துள்ளன. ஆனால் இதுபற்றி வடகொரியா தலைமை பகிரங்கமாக பதில் அளிக்கவில்லை.

ஆனாலும் தென் கொரியாவின் உதவிகளை வடகொரியா ஏற்றுக்கொள்ளும் என்று தென் கொரிய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் பார்க் ஜீ வோன் தெரிவித்துள்ளார். அப்படி ஏற்றால் தான் ேபரழிைவ தடுக்க வாய்ப்பு உண்டாகும்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியா செல்ல உள்ள நிலையில், வடகொரியாவில் கொரோனா பரவுவது முக்கிய விவாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story