இனவெறி தாக்குதல் 10 பேர் பலி; சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்ட வாலிபர், நேரடி ஒளிபரப்பு


Image Courtesy: dailymail.co.uk
x
Image Courtesy: dailymail.co.uk
தினத்தந்தி 16 May 2022 5:21 AM GMT (Updated: 2022-05-16T10:51:08+05:30)

இனவெறி தாக்குதல் : சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்ட வாலிபர் 10 பேர் பலியானார்கள். இதனை வாலிபர் சமூகவலைதள நேரலையில் ஒளிபரப்பி உள்ளார்.

நியூயார்க்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பப்பலோ சூப்பர் மார்க்கெட்டுக்கு கடந்த சனிக்கிழமை காரில் வந்து இறங்கிய கவச உடை அணிந்த 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து கண்மூடித்தனமாக  50 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் 10 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 8 பேரும் 2 அமெரிக்கர்களும் இறந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த துப்பாக்கிச் சூட்டை அங்கிருந்த முன்னாள் போலீஸ்  அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் தடுத்ததால் அதிகமான உயிர்ப் பலி  தடுக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸ்  அதிகாரிகள் அவரை கைது செய்தனர். 

அவரது பெயர் பெய்டன் ஜென்ட்ரான்(18) தான் படுகொலை செய்தபோது கறுப்பின சமூகத்தை குறிவைத்ததாக ஜென்ட்ரான் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக நியூயார்க் நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கவச உடை அணிந்து சனிக்கிழமை அன்று அங்காடிக்கு வந்த நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் இதனை அவர் சமூகவலைதள பக்கத்தில் நேரலையும் செய்தார். 

இனவெறி நோக்கத்திலே இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட தகவல்களில் யூத எதிர்ப்பு, இனவெறி தொடர்பான வெள்ளை அறிக்கைகள் இருந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனது ஊரில் இருந்து 300 கிலோ மீட்டர் பயணம் செய்து இங்கு வந்த தக்குதல் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

Next Story