ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கொழும்பு,
இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் அவர், இதற்காக உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மந்திரி சபையை விரிவுபடுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நான்கில் ஒரு பங்கு மின்சாரம் எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், தினமும் 15 மணி நேரமாக மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த நெருக்கடியைத் தவிர்க்க நாங்கள் ஏற்கனவே பணம் பெற்றுள்ளோம். நுகர்வோருக்கு எரிவாயுவை வழங்க 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாங்கள் உடனடியாகப் பெற வேண்டும்.
எரிவாயு மற்றும் மண்ணெண்ணை அவசர தேவையாக உள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் டாலர் கையிருப்பில் தட்டுப்பாடு உள்ளது
இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன.
நாங்கள் பல கடுமையான கவலைகளை எதிர்கொண்டுள்ளோம். இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. தற்போது, நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது.
தற்போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க நான் முன்மொழிகிறேன். 2022ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்திற்கு மாற்றாக புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம். அதனை சலுகை வரவு செலவுத் திட்டமாக முன்வைக்க உத்தேசித்துள்ளோம்.
நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.
தற்போதைய பிரச்னைகளை தீர்க்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை அல்லது அரசியல் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை அவசரமாக உள்ளது. தற்காலிக, நிரந்தர திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
பிரதமர் பதவியை நான் கோரவில்லை. நாடு எதிர்கொண்டுவரும் சவாலான சூழலை பார்த்து அதிபர், இந்த பொறுப்பை ஏற்க அழைப்பு விடுத்தார். அடுத்த 2 மாதங்கள் நமக்கு கடுமையானதாக இருக்கும்” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
Related Tags :
Next Story